Tuesday, April 7, 2015

PREDICTIONS

 ஜோதிட பலன்




     சில ஆண்டுகளுக்கு முன்னர் 'மகவோட்டம்' எழுதும்போது தூமகேது எனப்படும் வால்நட்சத்திரத்தைக் குறிப்பிட்டிருந்தேன். 
தூமகேது என்றால் 'புகை கிரகம்' என்று அர்த்தம்.
'கேது' என்பது பொதுவாகக் கிரகத்தைக் குறிக்கும். எப்படியோ ராகுவின் உடற்பகுதியின் பெயராக மாறிவிட்டது. 
தூமகேது தோன்றுவது குறித்து பல நம்பிக்கைகள் இருந்தன. தீயபலனைத் தருபவை என்றே நம்பினார்கள்.

கி.பி 68 ஆம் ஆண்டு ஒரு தூமகேது தோன்றியது. அவ்வமயம் வரலாற்றிலேயே மிகுந்த அரக்கமனம் படைத்த கொடுங்கோலர்களின் வரிசையில் இடம்பெற்று விட்ட நீரோ மன்னன் ரோமப் பேரரசை ஆண்டு வந்தான். அரசனுக்கு ஆபத்து நேரும் என்று சொல்லக் கேள்விப்பட்ட நீரோ, கதிகலங்கிப் போய் தன் நாட்டிலிருந்த அரச மரபினரையும், பிரபுக்களையும் கொலை செய்ய ஆரம்பித்தான். இவ்வாறு செய்தால் தூமகேதுவின் இரத்த தாகம் அடங்கி, அது திரும்பிப் போய்விடும் என்றும், தான் மட்டும் தப்பித்து 
விடலாம் என்றும் நம்பினான்.

அது என்னவோ! சொல்லி வைத்தாற் போல போய்விட்டது... நிம்மதிப் பெருமூச்சு விட்ட நீரோ மன்னன் தன்னுடைய ஆஸ்தான சோதிடனாகிய பேபிலஸ¤க்கு மிக நல்ல முறையில் பரிசளித்தான். 

இருப்பினும், சில ஆண்டுகள் கழித்து தன்னுடைய சொந்தப் பாதுகாப்பாளர்களாலேயே கொலை செய்யப்பட்டு ஒழிந்தான்.

எல்லா சோதிடர்களும் பேபிலஸைப் போல் கொடுத்து வைத்தவர்களில்லை. 
நீரோவின் பாட்டனாகிய டைபீரியஸ் தனக்குக் கெட்ட பலன்களைக் கூறிய தன்னுடைய ஆஸ்தான சோதிடனைக் கைகளையும் கால்களையும் கட்டி ஆற்றில் வீசி எறியச் செய்தான்.

பதினொன்றாம் லூயி மன்னன் பிரஞ்சு நாட்டை ஆண்ட சமயத்தில், அவனுடைய மிக முக்கியமான காதலி ஒருத்தியின் இறப்பை முன்கூட்டியே அவனுடைய ஆஸ்தான சோதிடன் கூறினான். 
அதன்படியே விரைவில் அவள் இறந்தாள். 
மனவருத்தமுற்ற லூயியோ சோதிடனின் கருநாக்கிலிருந்து பிறந்த வாக்கு அவளைக் கொன்று விட்டது என்று நம்பினான். 
ஆகவே, தன்னுடைய குண்டர் படையை அரசவையில் தயாராக இருக்கச் செய்துவிட்டு, சோதிடனை சபைக்கு வரவழைத்தான். 
லூயி சைகை காட்டியவுடன், குண்டர்கள் சோதிடனைப் பிடித்து ஒரு சாக்குப் பையில் போட்டுத் தைத்து, ஸெயின் ஆற்றில் எறிந்துவிட வேண்டுமென்று  அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். 
தன் முன் வந்த சோதிடனிடம் அரசன், "நீ மற்றவர்களின் ஆயுளை நிர்ணயம் செய்கிறாயே..! நீ எவ்வளவு நாட்களில் இறப்பாய் என்பதை உன்னாலேயே கூற முடியுமா...?'' என்று கேட்டான்.
சோதிடன் சுதாரித்துக்கொண்டான்.
கேள்வியின் தன்மை அப்படி. 
ஏன் அரசன் கேட்கிறான் என்பதன் காரணத்தை உணர்ந்துகொண்டு விட்டான்.
இதற்கெல்லாம் சோதிடம் தேவையில்லையே.
Common Sense என்பார்களே. அது இருந்தால் போதும். அது அந்த சோதிடனிடத்தில் நிறைய இருந்தது. 

அதற்கு அந்த சோதிடன், 
"அரசே! விண்மீன்களும் கோள்களும் கூறுவதைத்தான் நான் தங்களிடம் கணித்துக் கூற முடியும்.... வேறெதையும் நான் கூற முடியாது. இந்த நாட்டின் அரசன் இறப்பதற்குச் சரியாக மூன்று நாட்களுக்கு முன்னதாக நான் இறந்து 
விடுவேனென்று விண்மீன்களும் கோள்களும் கூறுகின்றன.." என்றான்.

லூயி மிகவும் யோசித்துவிட்டு, விஷப் பரீட்சைகள் எதற்கு என்று சைகை காட்டாமல் இருந்துவிட்டான்.
அதிலிருந்து சோதிடனுக்குச் சகலவிதமான வசதிகளையும் அரண்மனையிலேயே செய்துகொடுத்து, தன்னுடன் வைத்துக்கொண்டு, அரச வைத்தியர்களை அவனுக்கென்று நியமித்து வைத்தான். 
அத்துடன் நில்லாமல் சோதிடனின் உடல்நிலை, மனநிலை, வசதிகள் முதலியவைகளை அக்கறையுடன் அடிக்கடி விசாரித்த வண்ணம் இருக்கலானான்.

டைபீரியஸ் மாதிரி ஆட்கள் இல்லாததாலோ என்னவோ, மலேசியாவில் தற்சமயம் லக்கனம் கணிப்பது முதல் ராகு காலம் நிர்ணயிப்பது வரை தவறாகக் கணித்துக்கொண்டும். விபரீத பலன்களைக் கூறிக் கொண்டும் பயமுறுத்திக் கொண்டும் பணம் பண்ணிக் கொண்டும் பலர்  இருக்கிறார்கள். 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

1 comment: