Saturday, May 24, 2014

UNWANTED SPECIAL KNOWLEDGE


வேண்டப்படாத அரிய தகவல்


கோலாலும்பூர் பத்து மலை



மலேசியாவின் முக்கிய முருகன் தலங்களில் ஒன்றாக உள்ளது 
கோலாலும்ப்பூரின் பத்து மலை - Batu caves. 
'Batu என்றால் மலாய் மொழியில் 'பாறை' அல்லது 'கல்'. 
அது ஒரு பெரிய சுண்ணாம்புப் பாறை- limestone; அதுதான் குன்றாக 
நிற்கிறது.
பன்னெடுங்காலமாக அந்த குன்றின்மீது விழும் மழை, படியும் பனி 
ஆகியவை எப்போது வடிந்துகொண்டேயிருக்கும்.
அதன் காரணத்தால் பெரும் பெரும் துளைகள், துவாரங்கள், குகைகள், குடம்புகள், stallagmites, stallagtites ஆகியவற்றைக் காணலாம். 
18-ஆம் நூற்றாண்டில் அந்தக் குன்றில் உள்ள பெரிய குகையொன்றில் முருகனை வழிபடலாயினர். 
அந்த வழிபாடு நாளடைவில் மிகச்சிறப்புப் பெற்றுவிட்டது. இப்போது தைப்பூசத்தின்போது பத்து லட்சத்துக்கு மேல் மக்கள் கூடும் விழா அங்கே 
நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பால்குடங்களும் காவடிகளும் அங்கு எடுக்கப்படுகின்றன.
சாதாரண நாட்களிலும்கூட அது ஒரு முக்கியமான பயணிகள் கேந்திரமாக விளங்குகிறது. 
2001-ஆம் ஆண்டில் ஒருநாள். அது ஒரு விசேடமான நாள். அந்த நாளன்று ஒரு குறிப்பிட்ட நேரம் அதி முக்கியமானது. 
அதை எத்தனையோ ஆண்டுகள் பஞ்சாங்கங்களைப் பார்த்தும் வான 
சாஸ்திரக் கணக்குகளையும் போட்டு செய்த கண்டுபிடிப்பு.
ஆகவே அன்று பத்துமலைக்குச் சென்றிருந்தேன்.
அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே அங்கு சென்றுவிட்டோம். 
தாகசாந்தி செய்துகொள்ளலாம் என்று அங்கிருந்த ஹோட்டலில் தேநீர் அருந்தச்சென்றோம். அங்கு, பக்கத்து மேசையில் நான்கு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவ்வப்போது சில தமிழ்ப்பாட்டுக்களைச் சொல்லி 
ரசித்துக்கொண்டிருந்தனர். 
அங்கிருந்து வரும்பொது அந்த பெண்களிடம் அந்த தினத்தின் 
முக்கியத்துவத்தைச் சொல்லிவிட்டு வந்தேன். அவர்கள் நிமிர்ந்து பார்த்து
விட்டு, "அப்படியா?" என்றார்கள்.

அதன் பிறகு நாங்கள் படிகளில் ஏறி குகைக்குச் சென்றோம்.
அங்கு திரிந்த  தமிழர்களிடம் சொன்னால் எடுபடாது என்ற அச்சம். 
எடுபடக்கூடிய தமிழர்களாக அங்குள்ளவர்கள் தோன்றவில்லை. 
ஆகவே அங்கிருந்த இரண்டு வெள்ளைக்காரப் பெண்மணிகளிடம் 
சொன்னேன். 
முதல் பெண், நான் சொல்லச் சொல்ல நகர்ந்து பின்பக்கமாகப் போனாள். 
அடுத்தவள் பிரிட்டிஷ்காரி. கொஞ்சம் ஆர்வம் காட்டினாள். இன்னொரு 
ஜப்பானிய இளைஞனும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டான்.

அதன்பின்னர் அங்கிருந்து திரும்பி வரும்போது, ஒரு கறுப்புப் பையைத் 
தோளில் தொங்கப்போட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் சிறிய சிறிய 
பிளாஸ்ட்டிக் பைகளில் இருந்த ஏதோ பொருள்களை வருகிறவர் 
போகிறவர்களிடம் விற்றுக்கொண்டிருந்தான். 

கோயில் வாசலில் ஒரு நரிக்குறவன். அவன் வியாபார மும்முரத்தில் 
இருந்தான். செத்த நரியின்றின் மண்டைத்தோலை உரித்து விலக்கி, அதன் 
மண்டையோட்டில் நீட்டிக்கொண்டிருந்த முட்களைக் காட்டி, 'நரிக் 
கொம்பு'களை விற்றுக்கொண்டிருந்தான்.

அங்கிருந்து வரும்போது, கைரேகை ஜோதிடம் சொல்வதாக ஒருவர் 
அந்தப் பக்கத்தில் ஒரு ஸ்டாலில் ஒரு மேசையைப் போட்டுக்கொண்டு 
அமர்ந்திருந்தார். அவரிடம் கையை நீட்டிய ஓர் ஆளின் உள்ளங்கையைப் 
பார்த்துவிட்டு, அதனை இன்னும் நன்றாகப் பார்க்கவேண்டும் என்பதற்காக 
ஒரு பூதக்கண்ணாடியைத் தன்னுடைய கறுப்புத் தொங்கு பையிலிருந்து 
எடுத்தார்.
அவரின் இடத்தைத் தாண்டி நாங்கள் இளநீர் அருந்த ஸ்டாலுக்குச் 
சென்றோம். சற்று நேரத்தில் அந்த நரிக்குறவன் தோளில் ஒரு கறுப்புப் பையைத் தோளில் தொங்கப்போட்டுக்கொண்டு வியாபாரம் முடிந்து சென்று
கொண்டிருந்தான். 
அந்த அற்புதமான விஷயத்தை யாரிடமும் சொல்வதற்குக்கூட முடியவில்லையே. சொன்னாலும் கேட்பாரில்லை. புரிந்துகொள்ளக்கூடியவர்களிடம் 
மட்டும்தான் அதைச் சொல்லலாம். 
அடேயப்பா! எப்பேற்பட்ட விஷேமான விஷயம்!!!
எனக்கு மனதில் ஓர் அடி. 'என்னடாது. எவ்வளவு பெரிய விஷயத்தை 
இவர்களிடம் சொல்கிறோம். சற்றும் எடுபடவேயில்லையே?'

மனத்தாங்கலுடன் காரில் ஏறினேன்.
ஏறுமுன் என் தோளில் தொங்கிக்கொண்டிருந்த பையை - கறுப்புபையை - 
பின்ஸீட்டில் போட்டேன்.
திரும்பிச்சென்றேன்.

இப்போது பதின்மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த ஆண்டுக்கு உண்டான ஆந்த விசேஷ நாளும் சென்று விட்டது. 
இந்தப் பதின்மூன்று ஆண்டுகளில் யாரிடமும் அந்த விசேஷத்தைச் 
சொல்லவில்லை. சொல்லவும் தோன்றவில்லை

இப்போது Retrospection -இல் பார்க்கும்போது, அதைச் சொல்லாமல் 
விட்டது நல்லதுக்குத்தான். ஏனெனில் அதை வைத்து கமர்ஷியலைஸ் 
செய்துவிடுவார்கள். விழா நடத்துவார்கள். காவடி எடுப்பார்கள், பால்குடம் எடுப்பார்கள். யாராவது வீஐப்பீயை அழைத்துப் பரிவட்டம் கட்டுவார்கள். 

எனக்கும் அந்த மலையில் உள்ள சித்தர்களுக்கும் மட்டுமே 
தெரிந்ததாக இருக்கட்டும்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, May 15, 2014

13

13



பதின்மூன்றைப் பற்றிய பயத்தை Tridecaphobia என்று சொல்வார்கள். ஆனால் இந்த பயம் தெனாலியின் லிஸ்ட்டில் இல்லை. ("எல்லாம் சிவமெயம் எண்ட மாதிரி எனக்கு எல்லாம் பெயமெயம்").
Octophobia என்பது எட்டைக் குறித்த பயம். 
ஐரோப்பியர்கள் கிரிஸ்துவர்களாக மாறுவதற்கு முன்னர் ஷாமானிஸம், பேகனிஸம், கெல்த்திய மதம், நார்ஸ் மதம் போன்ற மதங்கள் இருந்தன.
பதின்மூன்று எண் பழைய கெல்த்திய, பண்டைய ஐரோப்பிய சமயத்தில் முக்கியமானதாக இருந்தது. 
பதின்மூன்றாம் நாள் முக்கியமான நாளாகவும் புனிதமான நாளாகவும் இருந்தது. 
கெல்த்திய சமயத்திலிருந்து கிரிஸ்த்துவ மதத்துக்கு ஐரோப்பியர்கள் 
மாறியபோது கெல்த்திய மத சம்பிரதாயங்களுக்கு பயங்கரமான 
தோற்றத்தையும் ஏற்படுத்தி, அவற்றைப் பற்றிய பயங்கரமான கருத்துக்களைப் பரப்பிவிட்டார்கள். அந்த மதத்தின் கூறுகளை Wiccaan, Witchcraft, Sorcery போன்றவற்றைச் சேர்ந்தவையாகக் கருதுமாறு ஏற்படுத்திவிட்டார்கள். இவையெல்லாம் மாந்திரீக வாதத்தைச் சேர்ந்தவை. 
கெல்த்திய மதத்தில் புனிதமாக இருந்த பல விஷயங்களை சாத்தானியக் கலாச்சாரமாகக் கருதச் செய்துவிட்டார்கள். 
பதின்மூன்றுக்கு ஏதோ விசேஷமான கூறுகள் இருக்கின்றன என்பது 
வாஸ்தவம்தான். 
பதின்மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமையாக இருந்தால் அதை மாந்திரீகவாதினிகளுடைய(Witches) முக்கிய நாளாகக் கருதுவார்கள். அது ஏதோ சூனியம் நிறைந்த நாள் என்று தற்கால ஐரோப்பியர்கள் கருதுவார்கள். அதனை Witches Sabbath என்றும் அழைப்பார்கள்.
இந்தச் சேர்க்கையானது Witchcraft, Satanic Worship ஆகியவற்றிற்கு முக்கியமானது. நம்முடைய சம்பிரதாயத்தில் வெள்ளிக்கிழமையும் 
அமாவாசையும் சேர்வது குறித்து பல விசேஷங்கள் உண்டு. 
அகத்தியர் யாஹ¥ மடற்குழுவில் Tridecaphobia, Friday 13, வெள்ளிக்
கிழமை அமாவாசை முதலியவற்றைப் பற்றிய சில மடல்கள் இருக்கின்றன.
அமெரிக்கர்கள் அப்போலோ விண்கலங்களை வெற்றிகரமாக 
செலுத்திக்கொண்டிருந்தபோது அந்த வரிசையில் அப்போலோ 13 
இருப்பதைக் குறித்து அந்த எண்ணுக்காக அஞ்சினார்.
அதுவும் கோளாறாக முடிந்தது. இன்னும் நிறைய 13ஐப் பற்றி சொல்லலாம்.
ஏசு பெருமானார் தம்முடைய பன்னிரண்டு சீடர்களுடன் இருந்து 
கடைசி பாஸோவர் விருந்தை உண்டார். அத்துடன் சீடன் யூதாஸை அவர் வெளியில் அனுப்பினார். சற்று நேரத்தில் விருந்து முடிந்த பின்னர், யூதாஸ் சில போர் வீரர்களுடன் வந்தான். அவன் ஏசு பெருமானாரின் கன்னத்தில் முத்தமிட்டான். அதையே அடையாளாகவும்  சைகையாகவும் கருதிய போர்வீரர்கள் ஏசு பெருமானாரைக் கைது செய்தனர். பின்னர் அவர் சித்திரவதைகளுக்குப் பின்னர் சிலுவையில் அறையப்பட்டார். யூதாஸ¤ம் தூக்குப் போட்டுக் கொண்டான்.
பதிமூன்றைப் பற்றி பயப்படுவதற்கு இந்தக் கதையையும் காரணமாகச் சொல்வார்கள்.
ஆனால் நம்முடைய ஆகம புராணங்களில் பதின்மூன்றைப் பற்றி 
ஏதும் பயம் இருப்பதாகத் தெரியவில்லை.
சீனர்கள் பதிமூன்றுக்குப் பயப்படுவார்கள். அவர்கள் பயப்படுவதன் 
காரணம் வேறு.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$