உடும்புப் பிடி
தமிழில் ஒரு பழமொழி உண்டு.
'உடும்பு போனால் போகிறது, கைவந்தால் போதும்'
இதற்கே இன்னொரு வடிவமும் உண்டு: 'உடும்புக்கறி வேண்டாம்;
கையை விட்டால் போதும்'.
உடும்புக்கறி சில மருத்துவ குணங்கள் உள்ளது. ஆகவே சில நோய்களுக்கு இதனைச் சாப்பிடச் சொல்வார்கள். மேலும் அது ஒரு gourmet item. விசேடமாக உண்ணப்படும் பொருள் - வௌவால் கறியைப்போல.
உடும்பு என்பது ராட்சதப்பல்லி வகையைச்சேர்ந்தது. இதிலேயே பல சாதிகள் இருக்கின்றன.
உடும்பின் பிடி மிகவும் பிரசித்தமானது. அதன் கால்களில் மிகக்
கூரான, உட்பக்கம் வளைவான நீண்ட நகங்கள் இருக்கும்.
அக்காலத்தில் மிக உயரமான கோட்டைகளில் ஏறுவதற்கு உடும்பைப்
பயன்படுத்தியுள்ளார்கள். அதன் இடுப்பில் கயிற்றைக் கட்டி கோட்டைச் சுவரின்மேல் எறிவார்களாம். சுவற்றில் இருக்கும் மேடு பள்ளம் பார்த்து, உடும்பு தன் நகங்களை வைத்து இறுக்கமாகப்பிடித்துக்கொள்ளும். அந்த கயிற்றைப் பிடித்துக்கொண்டு சுவற்றில் ஏறிவிடுவார்கள்.
உடும்புகளை வளர்த்து அவற்றை இதற்கென பயிற்சி கொடுப்பவர்களும்
இருந்தனர்.
சாம்ராட் சிவாஜியின் காலத்தில் பிரம்மாண்டமான மலைக்கோட்டைகள்
நிறைய இருந்தன. அந்த மலைக்கோட்டைகளை எவ்வகையிலும் பிடிப்பது
கஷ்டம்.
சிவாஜி தம்முடைய படையில் உடும்புப்பிரிவு ஒன்றை வைத்திருந்தார்.
உடும்புக்கு 'கோர பாதா' என்ற பெயருண்டு. கோர' என்பது கூர்மையான என்ற பொருளையும் தரும்.
மராத்திய மொழியில் உடும்பை 'கோர்பாட்' என்பார்கள். உடும்பு
வளர்ப்பவர்களை 'கோர்படே' என்று அழைப்பார்கள். இவர்களின் அணி,
சிவாஜியின் படையில் இருந்தது.
இப்போது இந்தப்பெயர், மராட்டியர்களிடையே வழங்கும் surname-களில்
ஒன்றாக விளங்குகிறது.
திருடர்களும் உடும்பை இதே காரணத்திற்காக வைத்திருந்தார்களாம்.
மதுரை திருமலை நாயக்கர் மகாலுக்குள் உடும்பைப் பயன்படுத்தியே அழகர் மலைக்கள்ளன் ஒருவன் உட்புகுந்ததாகக் கூறுவார்கள். அந்தக் கள்ளன், திருமலை நாயக்கரிடம் சவாலிட்டிருந்தானாம்.
உடும்பைப் பிடிப்பதை சர்வ சாக்கிரதையாகச் செய்யவேண்டும்.
இல்லையெனில் அது நம்மைப் பிடித்துக்கொண்டுவிடும். எந்த இடத்தைப்
பிடிக்கிறதோ, அதனை விடாது. பிடித்து இழுத்தால் சதையைப் பிய்த்துக்
கொண்டு வந்துவிடும். சில சமயங்களில் ஏடாகூடமாக ஏதாவது அங்கத்தை எக்கச்சக்கமாகப் பிடித்துக்கொண்டு விட்டால் போச்சு. 'சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந்தருளுவது இனியே', என்ற கதைதான்.
இன்னும் கொஞ்சம்...அடுத்து...
மலேசியாவில் திரங்காணு என்னும் மாநிலம் ஒன்று இருக்கிறது.
மலாயாத் தீபகற்பத்தின் கிழக்கோரப் பிரதேசம். காடுகளும் மலைகளும்
நிறைந்த இடம். Virgin jungle என்று சொல்வார்களே. அப்படியாப்பட்ட இடம். உண்மையிலேயே அப்படித்தான். அந்த அடர்ந்த காட்டுக்குள் தனியாக நுழைந்துவிட்டால் வெளிவரமுடியாது. மதிமயக்கம் ஏற்பட்டு, வழிதவறி விடுவார்கள். மோகினிகள் கூட்டிச் சென்றுவிடுவதாகச் சொல்வார்கள். அந்த மோகினிகள் virginகளா என்பது தெரியவில்லை. இதெல்லாம் 'கண்டவர் விண்டிலர்' சமாசாரம்.
அந்த மாநிலத்தில், நடுக்காடுகளுக்கு நடுவில் ஓர் ஊர். குவாலா ப்ராங்க் (Kuala Brang) என்று பெயர். ஒரே ஒரு ரோடு.
அங்கு 1974-ஆம் ஆண்டு வேலையில் சேர்ந்தேன்.
Humourotherapyயில் இதைப்பற்றி அதிகம் சொல்லவேண்டியிருக்கிறது.
அந்த ஊர், மூன்று ஆறுகளின் சங்கமத்தில் இருக்கிறது. ஜப்பானியர் போட்ட மரப்பாலங்கள். திரங்காணு ஆறே பெரியது.
அவ்வப்போது ஸ்பீட் போட் என்னும் படகில் ஆற்றின் வழியே மலைகளை நோக்கிச் செல்வதுண்டு.
சில சமயங்களில் நண்பர்களும் உடன் வருவர்.
அப்படி ஒரு சமயம், நண்பர்களுடன் சென்றபோது, ஆறுமுகம் என்ற நண்பரும் உடன்வந்தார். அவர் மாநிலத் தலைநகரின் பெரிய மருத்துவ மனையில் மருந்தகத்தின் பொறுப்பாளராக இருந்தார். மிகவும் பெரிய புள்ளி. பல இடங்களில் ரூட் போட்டுவைத்திருப்பார். மாநில இயக்குனருக்கே இல்லாத பல சலுகைகள் இவருக்குண்டு.
மானும் மயிலும் ஆடிடும் காடு
மாலை நல்நேரம் மாநதி மீது
படகில் சென்றோமே.....
உல்லாசப் படகில் சென்றோமே
என்று பானுமதி மாதிரி பாடவில்லை. சும்மா அரட்டையடித்தவாறு சென்றோம்.
அப்போது ஏதோ ஒன்று ஆற்றின் குறுக்காக வேகமாக நீந்திச் சென்றது. முதலையோ என்று முதலில் நினைத்தோம். ஆனால் தலையைத்
தண்ணீருக்கு மேல் தூக்கியவாறு அது நீந்தியது.
அது ஒரு ராட்சத உடும்பு. இகுவானா என்று சொல்லப்படும் இனத்தில் ஒரு சாதி.
ஆறுமுகத்துக்கு உடனே வாய் ஊறிவிட்டது.
'எத்தாந்தண்டி உடும்பு; படகத் திருப்புங்க. போய்ப் பிடிப்போம்', என்று கேட்டார். படகும் கரையை நோக்கித் திரும்பியது.
அந்தப் பாழாய்ப்போன உடும்பு, கரையின்மீது சற்றுத் தொலைவில் நின்று கொண்டு, போஸ் கொடுத்துக்கொண்டிருந்தது.
ஆறுமுகம் படகைவிட்டுக் குதித்து கரையில் ஏறிச்சென்றார்.
சற்று உயரத்தில் ஓரிடத்தில் காலைவைத்தார். 'பசக்' கென்று உள்ளே சென்றது. சரியான சகதி. 'உழடு' என்று சிவகங்கைச் சீமையில் கிராமங்களில் சொல்வார்கள்.
காலை வெளியில் எடுப்பதற்காக இன்னொரு காலை நன்றாக ஊன்றினார். இப்போது 'விலுக்'கென்று அதுவும் உள்ளே சென்றுவிட்டது.
தடுமாற்றத்தைத் தவிர்ப்பதற்காக வலதுகையை தரையில் ஊன்றினார்.
அதுவும் உள்ளே சென்றது.
Free-ஆக இருந்த இடது கையை - உள்ளேவிடவில்லை.
மேலே தூக்கி விசிறிக்கொண்டு அபயக்குரல் கொடுத்தார்.
அந்தப் பழிகார உடும்பு, தானிருந்த இடத்திலிருந்து கொண்டு, சாவகாசமாகத் திரும்பி ஆறுமுகத்தைப் பார்த்தது.
அதன் வாய் ஒருமாதிரியாக நீண்டு கீழிறங்கித் தோன்றியது. இளக்காரமாய்ச் சிரித்ததா என்பது தெரியாது. கிட்டத்தில் இருந்து பார்த்தவர் ஆறுமுகம்தானே? அவருக்குத்தான் தெரியும்.
எங்களில் இருவர் படகின் நீண்ட கோலை அவரிடம் நீட்டினோம்.
இடக்கையால் பிடித்துக்கொண்டார். இழுக்கமுடியவில்லை. ஏதோ அந்தப்
பக்கமாய் பிடித்துக்கொண்டு இழுப்பதுபோல் தோன்றியது.
சகதிதான் அப்படியிழுத்தது. முடிவில் ஐந்துபேர் ஆறுமுகத்தை இழுத்துப் படகில் ஏற்றினோம்.
உடும்பு பிடித்தது போதும் என்று சொல்லி தொடர்ந்து படகைச்
செலுத்தினோம்.
அந்த உடும்பு அங்கேயே நின்றுகொண்டு படகையே பார்த்துக்
கொண்டிருந்தது.
இதுவும் ஒரு வகையில் உடும்பு பிடி தானே?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
haha:))
ReplyDeleteஹஹா
ReplyDelete