Tuesday, December 16, 2014

QUIRKS OF FATE


விதியின் விளையாட்டு





விதி என்பது எப்படி எப்படியெல்லாம் வேலை செய்யும் என்பது 
நினைப்பதற்கே விந்தையாகவும் விசித்திரமாகவும் அற்புதமாகவும் இருக்கும். 
இரண்டாம் உலக யுத்தத்தின்போது நடந்த சில நிகழ்ச்சிகளை 
ஏற்கனவே அகத்தியரில் எழுதியிருக்கிறேன். 

போலந்தின் தலைநகர் வார்ஸாவில் யூதர்கள் வசித்த கெட்டோ 
என்னும் சேரியிலிருந்து 1940-ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கானவர்களை 
ஜெர்மன் புயல் படையினர் கைது செய்து கொண்டுபோய் பல இடங்களில் 
உள்ள கூட்டுச்சிறைகளில் அடைத்துவைத்தார்கள். அந்த ஆறாண்டுகளில் 
அறுபது லட்சம் யூதர்கள் அழிக்கப்பட்டுவிட்டனர். வார்ஸாவில் அவர்கள் 
கைதாக்கப்பட்டு நடத்திச்செல்லப்படும்போது படம் எடுத்திருக்கிறார்கள். 
அதில் ஒரு சிறுவன் - ஆறு வயதுக்குள் இருக்கும்- தன் சிறிய கைகளை 
ஸரெண்டர் முத்திரை காட்டி, தூக்கிச்செல்வதை அந்தப் படத்தில் 
காணலாம். 
அறுபது லட்சம் பேர் மாண்டிருக்கின்றனர். 
அந்தச் சிறுவன் யுத்தம் முடியும்போது உயிருடன் இருந்தான். 

1944-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6-ஆம் தேதியை D-Day என்று 
அழைப்பார்கள். அந்தத் தினத்தன்று ஒன்பதாயிரம் கப்பல்களில் இரண்டு 
லட்சம் போராளிகள் ஆயிரக்கணக்கான டாங்க்குகள் போன்ற 
சாதனங்களுடன் நாட்ஸி ஜெர்மானியர் கையிலிருந்த பிரான்ஸ் நாட்டில் கரையிறங்கினார்கள். 

வரலாற்றிலேயே மிகவும் உக்கிரமாக நடைபெற்ற போர்களில் 
அதுவும் ஒன்று. 
அந்தப் போரின் ஆரம்பக் கட்டத்திலேயே சில ஜெர்மன் படை
வீரர்கள் பிடிபட்டனர். 
      
அவர்களில் சில கொரியாக்காரர்கள் இருந்தனர். அவர்களைப் 
பிடித்த அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சி. ஏனெனில் கொரியாக்காரர்கள் அங்கிருப்பதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை. அந்தக் கால 
கட்டத்தில் கொரியா ஜப்பானின் காலனி நாடாக அடிமைப்பட்டுக் 
கிடந்தது. ஜப்பானியர்களின் இம்ப்பீரியல் ஜப்பனீஸ் படையில் லட்சக்கணக்கான கொரியர்கள் இருந்தனர்.
அவர்கள் நாட்டிலிருந்து எண்ணாயிரம் மைல்களுக்கு அப்பால் ஜெர்மன் வெய்ர்மா·க்ட் படையின் யூனி·பார்ம் அணிந்துகொண்டு 
கொரியர்கள் பிரான்ஸ் நாட்டின் நார்மண்டிக் கரையில் என்ன 
செய்கின்றனர்?
விசாரணை செய்யும்போது அவர்களின் கதை தெரிந்தது.

1936-ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவின் வடபகுதியாக இருந்த 
மஞ்சூரியாவைப் பிடித்தது. அது ரஷ்யாவின் எல்லைப்புறம். ரஷ்யாவுடன் அந்தச் சமயத்தில் மோதல் ஏற்பட்டது. மஞ்ச்சூரியாவுக்கு ஜப்பான் 
அனுப்பிய படையில் இந்தக் கொரியர்கள் இருந்தனர். ரஷ்யப்படையிடம் அவர்கள் பிடிபட்டனர். 
ஜெர்மனி ரஷ்யாவின்மேல் திடீரென்று படையெடுத்து வெற்றி மேல் வெற்றி பெற்றது. ரஷ்யர்களுக்கு ஆள் சேதம் அதிகம்.
      அப்போது ரஷ்யர்களுக்கு ஆள் பலம் வேண்டியிருந்ததால் 
ரஷ்யப்படையில் மேற்படி கொரியர்களைச் சேர்த்து ஜெர்மானியர்களுக்கு எதிராகப் போரிட வைத்தனர். 
      அவ்வாறு அவர்கள் போரிட்டபோது ஜெர்மானியரிடம் பிடிபட்டனர். அவர்களை என்ன செய்வது என்று ஜெர்மானியர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் ஜப்பானியப் படையில் இருந்தவர்கள். ரஷ்யர்களிடம் 
பிடிபட்டதனால் ரஷ்யப் படையில் சேர்ந்து போரிடுமாறு ஆணையிடப் பட்டனர். அதன் பின்னர் ஜெர்மனியிடம் பிடிபட்டனர். 

அந்தச் சமயத்தில் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனி பின்வாங்கிக்
கொண்டிருந்தது. ஸ்டாலின்கிராடு முதலிய பல இடங்களில் லட்சக்கணக்கான ஜெர்மன் போராளிகள் இறந்து போய்விட்டனர். 
இன்னும் பலர் காயமடைந்தனர். லட்சக்கணக்கானவர்கள் சரண
டைந்திருந்தனர். ஆட்சேதமும் பொருட்சேதமும் மிக அதிகம்.
      போதாததற்கு அமெரிக்கா, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஆகியவற்றின் 
படைகள் விரைவில் ·பிரான்ஸ் நாட்டில் கரையிறங்கவிருப்பதால் அங்கு படைகளை அதிகமாக அனுப்பவேண்டியிருந்தது. படைகளுக்கு ஆள்தேவை. ஒவ்வோர் ஆளும் தேவைதான். 
ஜப்பான் ஜெர்மனுக்கு நேசநாடு என்பதால் அந்தக் கொரியார்களை 
ஜெர்மன் படையில் சேர்த்துக்கொண்டனர்.
அவர்களின் ராசி அமெரிக்கப் படையினரிடம் சிக்கிக்கொண்டனர். 

அதன் பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் எனபது தெரியவில்லை. 
     
       இப்படியும் இருக்கலாமோ?

1945-இல் ஜப்பான் சரணடைந்துவிட்டது. 
கொரியா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 

ரஷ்யா/சீனாவின் ஆதிக்கத்தில் வடகொரியா; அமெரிக்காவின் 
ஆதிக்கத்தில் தென்கொரியா. 
நம்ம கொரியாக்காரர்கள் தென்கொரியாப் படையில் சேர்க்கப்பட்டு 
சண்டையிட்டிருக்கலாம். 
அப்போதும் விதி விடாமலிருந்திருக்கும்.
வடகொரியா/சீனா படையிடம் அவர்கள் சிக்கியிருக்கலாம்.

சீனா படைகள் அருணாசல் அல்லது லடாக்கில் சண்டையிட்ட
போது அவர்கள் சீனப்பட்டாளத்தில் சேர்ந்து சண்டையிட்டிருக்கலாம். 
அப்போது இந்தியாவிடம் சிக்கியிருக்கலாம்.
அத்துடன் அவர்கள் ரிட்டயர் ஆகிவிட்டிருப்பார்கள். 
1936-இலிருந்து 1962-வரைக்கும் 26 ஆண்டுகள். 
ரிட்டயர்மெண்டு ஏஜ்தான். 
இந்தியாவில் எங்காவது செட்டில் ஆகிவிட்டிருப்பார்களா 
என்று தேடிப்பார்க்கலாம். 
       யார் கண்டது?
       அண்ணாநகர் காலனியில் கூர்க்காவாகக்கூட வேலை 
பார்த்திருக்கலாம்.
       சத்தியராஜே கூர்க்கா வேஷம் போடும்போது இவர்களுக்கென்ன? 
அசப்பில் பார்க்கும்போது இவர்களும் கூர்க்கா மாதிரியேதான் 
இருப்பார்கள்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday, November 19, 2014

THE TELUGU CHOLZAS


தெலுங்கு சோழர்கள்

ரொம்ப நாளாக நான் எழுதவேண்டும் என்று நினைத்த விஷயங்களில் ஒன்று தெலுங்கு சோழர்கள் பற்றியது.
சங்க காலச் சோழர்களில் மிகவும் புகழ் வாய்ந்தவர் கரிகால் 
பெருவளத்தான் என்னும் கரிகால் சோழர். இவர் கிமு 200-இல் இருந்தார் 
என்ற பொதுவான கருத்து ஆராய்ச்சியாளர்களிடையே உண்டு. 
வடநாடுகளை நோக்கிப் படைகளை அனுப்பி, இமயமலை வரைக்கும் 
சென்று அங்கு சோழர்களுடய புலி இலச்சினையைப் பொறித்தார். செல்லும் வழியில் உள்ள நாடுகளையும் வென்றிருப்பார். எந்தெந்த நாடுகளை வென்றார் என்பதற்கு ஒன்றும் தகவல்கள் இல்லை. 
ஆனால் ஒன்று. 
பிற்காலத்தில் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் சோடர் என்னும் 
மரபினர் ஆண்டு வந்தனர். அவர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மரபினர் இருந்தனர். அவர்கள் அனைவருமே தங்களைக் கரிகால் சோழரின் 
பரம்பரையினர் என்றே சொல்லிக்கொண்டனர்.
இவர்கள் கிருஷ்ணை ஆற்றுப் பிரதேசங்கள், நெல்லூர், கடப்பை 
முதலிய வட்டாரங்களில் சிறு சிறு நாடுகளை ஆண்டுகொண்டிருந்தனர். 
கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாவது இவர்கள் இந்தப் பிரதேசங்களை ஆண்டு வந்திருக்கின்றனர். 
விஜயாலயன் மரபினர் ஆண்டு வந்த சோழசாம்ராஜ்யத்தின் கீழ் 
சிற்றரசர்களாக இந்த மரபினர் அனைவருமே  விளங்கினர். அதுவும் 
சாளுக்கிய சோழராகிய முதலாம் குலோத்துங்க சோழர், சோழ 
சாம்ராஜ்யாதிபதியாகிய பின்னர் தம்முடைய உரிமை நாடாகிய வேங்கி 
நாட்டை ஒரு தெலுங்கு சோடரிடம் ஒப்படைத்தார். அங்கு படையெடுத்த மேலைச் சாளுக்கியர்களுக்கு எதிராக தெலுங்கு சோடர்களுக்குக் 
குலோத்துங்கர் பெரும்படையை அனுப்பி உதவினார். 
"மரபினர் மரபினர்" என்று பன்மையில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். 
எத்தனை மரபுகள்?

இவர்களில் ரொம்பவும் முக்கியமானவர்கள் வேலணாண்டி சோடர்கள்.
கிபி 1076-இலிருந்து கிபி 1216 வரைக்கும் அவர்களுக்குத் 
தொடர்ச்சியான வரலாறு இருக்கிறது. 
இவர்கள் குண்டூரை ஆண்டவர்கள். பின்னர் வேங்கியில் இருந்தனர் அதன் பின்னர் பித்தாபுரம் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். 
அந்த காலகட்டத்தில் ஆண்ட ஏழு வெலணாண்டி சோழ மன்னர்களில் மூன்று பேர் ராஜேந்திர சோழன் என்ற பெயரை வைத்திருந்தனர். 
பிற்காலத்தில் பாண்டியர்களுக்கும் காக்கத்தீயர்களுக்கு ஏற்பட்ட 
போர்களில் இவர்கள் ரொம்பவும் அடிபட்டனர். முடிவில் காக்கத்தீயப்
பேரரசில் இவர்கள் நாடு அடக்கப்பட்டுவிட்டது.

தெலுங்குச் சோழர்களில் இன்னொரு மரபினர் ரேணாண்டுச் சோடர். தற்காலக் கடப்பை மாவட்டத்தை ஆண்டனர். ஆரம்ப காலத்தில் 
தனியாட்சியுடன் இருந்தார்கள். பின்னர் கீழைச் சாளுக்கியர்களுக்கு 
அடியில் இருக்கலானார்கள். ஏழாம் நூற்றாண்டிலிருந்து பழந்தெலுங்கு 
மொழியிலேயே தங்களுடைய கல்வெட்டுக்கள் அனைத்தையும் 
முதன்முதலாக எழுத ஆரம்பித்தனர்.

இன்னொரு முக்கியமான மரபு பொத்தப்பிச் சோழர்கள். கடப்பை 
வட்டாரத்தில்தான் இவர்களும் ஆட்சி நடத்தினர். பின்னர் சித்தூர் 
மாவட்டம் வரைக்கும் அவர்கள் ஆட்சி பரவியது. 

ரேணாண்டு சோழர்களுக்குக் கிளை மரபினர் இருந்தனர். அவர்கள் 
கோனிடேன சோழர்கள் எனப்பட்டனர். குண்டூரில்தான் இவர்களும் 
ஆட்சி புரிந்தனர். சில சமயங்களில் தன்னாட்சியுடன் இருந்தனர். மற்ற சமயங்களில் ரேணாண்டு சோழர்களின் கீழ் ஆட்சி புரிந்தனர். பிற்காலத்தில் காக்கத்தீயப் பேரரசர் கணபதி ரேணாண்டு சோழர்களுடன் கோனிடேன மரபினரையும் தம்முடைய சிற்றரசர்களாக ஆக்கிக் கொண்டார். 

இன்னும் ஒரு மரபினரும் இருந்தனர். நன்னூரு சோழர்கள் என்னும் இவர்களைப் பற்றி அதிகம் தெரியவில்லை. 

இன்னொரு முக்கிய மரபு நெல்லூர் சோடர்கள். சோழ பிஜ்ஜனா என்பவர்தான் இந்த மரபில் முதலாவதாக அறியப்படுபவர். இவர்கள் மேலைச் சாளுக்கியர்களின் சிற்றரசர்களாக இருந்தனர். பக்கநாடு என்னும் பகுதியை ஆண்டுவந்தனர்.
திக்க சோடர் என்பவர் கிபி 1223-இல் ஆண்டவர். அவர் தம்முடைய படைகளைத் தெற்கு நோக்கிச் செலுத்தி காவிரிக் கரை வரைக்கும் 
நாட்டைப் பிடித்துக்கொண்டார்.

அவர்கள் சோழப்பேரரசுக்குப் பெயரளவில் கட்டுப்பட்டவர்கள். 
ஆனால் சுதந்திரமாகத்தான் ஆட்சி புரிந்தனர். ஏனெனில் அப்போது 
சோழப் பேரரசராக இருந்த மூன்றாம் ராஜராஜ சோழர் பாண்டிய நாட்டின் 
மாறவர்மர் சுந்தர பாண்டியரால் இருமுறை தோற்கடிக்கப்பட்டார். 
பாண்டியநாடு சுதந்திரம் பெற்றது. வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு 
மைசூரிலிருந்து ஹோய்சளப் பேரரசர் வீரநரசிம்மர் தம்முடைய 
படைகளைக் கொண்டு பல்லவ கோப்பெருஞ்சிங்கன், சுந்தர பாண்டியர், 
அனியங்க பீமச் சோடர் ஆகியோர் அடங்கிய கூட்டணியை வென்று 
மூன்றாம் ராஜராஜ சோழரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார். 

ஹோய்சள வீரநரசிம்மரின் மகன் சோமேஸ்வரர் பாண்டியர்களுடன் 
சேர்ந்துகொண்டு அடுத்து வந்த மூன்றாம் ராஜேந்திர சோழரைத் தாக்கினார். 
இம்முறை தெலுங்குச் சோட திக்கர் ராஜேந்திர சோழருக்கு 
உதவியாகத் தம் பெரும்படைகளுடன் வந்து ஹோய்சளரையும் 
பாண்டியரையும் தாக்கி வென்றார். ஆனால் தொண்டை மண்டலத்தைத் தமக்கே வைத்துக்கொண்டார். 
அத்துடன் தமக்கு 'சோழ ஸ்தாபனாச்சார்யன்' என்ற விருதுப் பெயரையும் சூட்டிக்கொண்டார். 
ஆனால் திக்க சோடரின் மகன் மனுமசித்தியின் காலத்தில் நெல்லூர் 
சோடர்கள் வலுவிழந்தனர். 

கிபி 1260-இல் மனுமசித்தி சோடருக்கும் எர்ரகடபாடு நாட்டுச் 
சிற்றரசர் கட்டமராஜுவுக்கும் இடையே மிகக் கடுமையான பூசல் 
ஏற்பட்டது. 
காரணம்? 
அந்த வட்டாரத்தில் பசுமையான பெரிய மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. இவை யாருக்கு உரிமையானவை என்பதில் பூசலும் மோதலும் ஏற்பட்டன. அந்தப் பெரும்போரில் மனுமசித்தி வென்றாலும் அவருடைய முக்கிய தளபதி இறந்துபோனார். இந்தப் போரால் நாடு பெரும் சேதத்தை அடைந்தது. இதனால் மனுமசித்திச் சோடர் இறந்து போனார். 

மனுமசித்திச் சோடரின் இறப்புக்குப் பின்னர் நெல்லூர் நாடு தன்னுடைய தனித்தன்மையை இழந்தது. பிற்காலப் பாண்டியர்களுக்கும் காக்கத்தீயப் பேரரசுக்கும் இடையே நடந்த போர்களின் களமாக விளங்கியது. அடிக்கடி கைமாறியது. கடைசியில் காக்கத்தீயப் போரரசுக்குள் கரைந்துவிட்டது. 

ஏன் இந்தத் தெலுங்குச் சோடர்களைப் பற்றி எழுதினேன் என்றால், 
கிபி 1076-இலிருந்து கிபி 1248 வரைக்கும் 172 ஆண்டுகள் சோழப் 
பேரரசர்கள் எழுவரின் ஆட்சியில் ஸ்திரத்தன்மை விளங்குவதற்கும் அந்த சோழர்கள் நிம்மதியாக ஆட்சி புரிவதற்கும் இந்தத் தெலுங்குச் சோடர்கள் பெரும்பங்கு வகுத்தனர். அவர்கள் இல்லையெனில் சோழப் பேரரசு நீடித்து இருந்திருக்கமுடியாது. 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$






Saturday, November 15, 2014

SATHTHABANGGI


இராமச்சந்திர கவிராயரின் சத்தபங்கி

படத்தைப் பெரிதாக்க இமேஜின் மீது க்லிக் செய்யவும்.







$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday, September 19, 2014

FAITH OVER MATTER


"தீக்குள் விரலை வைத்தால்......"

தமிழன்பன் எழுதிய 'என்னைச் செதுக்கிய சிற்பிகள்' என்னும் சிறு நூலிலிருந்து........ 

------------------------------------------------------------------------------------------- 
 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday, September 3, 2014

BESUT WEAPONS



பெஸுட் வட்டாரத்தில் வழங்கும் ஆயுதங்கள் 


கராம்பிட் எனப்படும் புலிநகம்




காப்பாக் கெச்சில்



காப்பாக் கெச்சில் பிடிக்கும் முறைகளில் ஒன்று



என்னுடைய அலங்கார காப்பாக் கெச்சில் -
வெண்கலத்தால் ஆனது



பாண்டிய இளவரசருடைய சின்னங்கள் -
கண்டரகோடரியும் யானையும்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



Saturday, August 23, 2014

THE TAMILIAN PARADIGM

தமிழர்களின் பாரடைம் 

பாரடைம் சிட்டுவேஷன் எனப்படும் சில உதாரணங்களைப் பார்ப்போம். 
சில ஆண்டுகளுக்கு முன்னர் - 1990-களின் பின்பாதியில் மலேசியாவில் 
ஒரு பெரிய பொருளாதார Boom Period இருந்தது. ஏராளமான தொழிற்சாலைகள். 
அப்போதிருந்த விலைவாசிக்குத் தக்க சம்பளம். ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் தொழிற்சாலைகளில் வேலை செய்தால் - ஓவர்டைமெல்லாம் சேர்த்து - ஐயாயிரம் ரீங்கிட்டுக்கு மேல் சம்பாதிக்க முடிந்தது. 
அப்போது இன்ஷ¥ரன்ஸ் தொழில் ஒரு பிடிபிடித்தது. இன்ஷ¥ரன்ஸ் 
தொழிலால் கோடீஸ்வரனாக முடியும் என்ற ஒரு மனப்பிராந்தியை இன்ஷ¥ரன்ஸ் தொழிலின் மகாகுருமார் அப்போது தோற்றுவித்து
விட்டனர்.
இன்னொரு பக்கம் மோட்டிவேஷனல் குருமார். அவர்கள் கொடுக்கும் 
மோட்டிவேஷனல் பயிற்சியால் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தினார்கள். 
இன்ன கற்களை அணிந்துகொண்டால் வாழ்க்கையில் வெற்றியைத் தவிர வேறு எதுவும் இருக்காது என்று இன்னொரு பக்கம். 
இன்ன ஹோமத்தைச் செய்தால் வானத்தையே வில்லாக வளைக்கலாம் என்பது மற்றொரு பக்கம். 
பெரும்பணத்தைச் செலவிட்டு, நிறையப் பொருள்களை நெருப்பில் போட்டு, டன் கணக்கில் நெய்யை ஊற்றி, பல சிக்கலான சடங்குகளுடன் நீண்ட நேரத்துக்கு ஆடம்பரமாகச் செய்யப்படும் ஹோமங்களும் பூஜைகளும் அபிஷேகங்களும் மட்டுமே தெய்வ அருளை மிக அதிக அளவில் விரைவில் பெற்றுத்தரமுடியும் என்று மக்கள் நம்ப வைக்கப் பட்டனர். 
அது ஒரு Sure-fire Method என்று மக்கள் நம்பவைக்கப்பட்டனர். 
அவர்கள் சொன்ன அந்த Sure-Fire, அவர்கள் போட்டுவைத்த பெரும் 
ஹோமகுண்டத்தில்தான் இருந்தது என்பதை மக்கள் உணரவில்லை.

கோயில்களால் பக்தி வளர்கின்றது என்ற நம்பிக்கை ஒரு பக்கம்.
இவற்றையெல்லாம் நம்பிக்கொண்டு ஒருவிதமான சொகுசான உணர்வுடன் திருப்தியாகப் பெரும்பான்மையான மலேசியத் தமிழர்கள் இருந்துவந்தார்கள். 
இதே மாதிரியான இன்னும் பல நம்பிக்கைகள். 
இவையெல்லாமே சிலவகையான பாரடைம்களை பெரும்பான்மையான மலேசியத் தமிழர்களிடையே தோற்றுவித்தன.
இவர்களில் பலர் எதையும் அதிகமாகவோ ஆழமாகவோ சிந்திப்பதுமில்லை. 
வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவது என்ற கோட்பாடு அவர்களிடம் வேறூன்றி விட்டது. அதற்குள் பெரும்பணத்தைச் சம்பாதித்துக்கொள்வது; வசதிகளைத் தேடிக்கொள்வது; அடுத்தவனைக் கெடுப்பது; ஏமாற்றுவது போன்றவற்ரைக் கைக்கொள்ளுதல்.
சமஸ்கிருதத்தில் 'மௌட்டீகம்' என்றொரு சொல் இருக்கிறது. 
இந்தச் சொல்லை நான் முதன்முதலில் அறிந்துகொண்டது சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத்திடமிருந்து. 
ஈ.வெ.கி.சம்பத் என்பவர் சுயமரியாதை இயக்கம், திராவிடக் கழகம், 
திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். 
தமிழ் தேசியக்கட்சி என்னும் கட்சியை இன்னொரு மூத்த தலைவராகிய நாவலர் நெடுஞ்செழியனுடன் சேர்ந்து ஆரம்பித்து, பிற்காலத்தில் காங்கிரஸில் சேர்ந்துவிட்டார். 
அருமையான குரல் வளம்; அற்புதமான சொல்லாற்றல்; ஆற்றொழுக்கான பேச்சு. சம்பத்துடைய பேச்சில் அதிகம் அடுக்கு மொழிகள் இருந்ததில்லை. 
அவருடைய தந்தையார் ஈவெ கிருஷ்ணசாமி நாயக்கர்.
தந்தை பெரியாருடைய அண்ணன்.
1927-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுயமரியாதை இயக்கத்துக்கு ஆதரவு தேடுவதற்காகவும் 'விடுதலை' பத்திரிக்கைக்கு சந்தா சேர்ப்பதற்காகவும் மலாயா வந்திருந்தார். 
என்னுடைய தந்தையார் சின்னமுத்து பிள்ளையும் அவருடைய அண்ணன் பெரியையா பிள்ளையும் அவரை இந்தோனீசியாவுக்கு வரவழைத்தனர். அங்கு என்னுடைய தந்தையார் 45 சந்தாக்களை இரண்டே நாட்களில் சேர்த்துக் கொடுத்தார். சில உரைகளையும் ஆற்றச்செய்தார்.
கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில்தான்.
அப்போதெல்லாம் சுயமரியாதை இயக்கத்தினரை பிராமணர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் 'சூனா மானா' என்றுதான் குறிப்பிடுவார்கள். 

அவர்கள் எந்த அர்த்தத்தில் 'சூனா மானா' என்று குறிப்பிட்டார்கள் 
என்பதை ஊகிக்கக் கால்க்யுலஸ் போட்டுப் பார்க்கவேண்டியதில்லை. 

ஈவெகி சம்பத்தை நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தேன். அவரைச் சந்திப்பதற்குத் தந்தையார் கூட்டிச் சென்றிருந்தார். 
அவர் ஆற்றிய உரையின்போது அவர் 'மௌட்டீகம்'  என்ற சொல்லைப் பயன்படுத்தினார். 
அதைப்பற்றி கேட்டபோது அதற்கு அவர் சுருக்கமான விளக்கம் சொன்னார்.
இப்போது அந்தச் சொல்லுக்கு அர்த்தத்தை என்னிடம் கேட்டால் நான் இப்படித்தான் சொல்வேன். 
"மூடத்தனம், முட்டாள்த்தனம், கேணத்தனம், கொங்காத்தனம், 
கோணங்கித்தனம், தெங்கணத்தனம், பேக்குத்தனம், பேமானித்தனம், 
ஏமாளித் தனம், கோமாளித் தனம், சொங்கித்தனம், அசட்டுத்தனம், அசமந்தம், புரியாத்தனம், போன்ற தன்மைகள் அனைத்துமே ஒன்று சேர்ந்தால் ஏற்படும் தன்மைதான் 'மௌடீக்கம்' என்பது.

ஆதிசங்கரர் பாடிய 'பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே" என்பதில் உள்ள 'மூட' என்னும் சொல்லிலிருந்து தோன்றியதுதான் 'மௌட்டீகம்'.

                                        $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, July 24, 2014