தமிழர்களின் பாரடைம்
சில ஆண்டுகளுக்கு முன்னர் - 1990-களின் பின்பாதியில் மலேசியாவில்
ஒரு பெரிய பொருளாதார Boom Period இருந்தது. ஏராளமான தொழிற்சாலைகள்.
அப்போதிருந்த விலைவாசிக்குத் தக்க சம்பளம். ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் தொழிற்சாலைகளில் வேலை செய்தால் - ஓவர்டைமெல்லாம் சேர்த்து - ஐயாயிரம் ரீங்கிட்டுக்கு மேல் சம்பாதிக்க முடிந்தது.
அப்போது இன்ஷ¥ரன்ஸ் தொழில் ஒரு பிடிபிடித்தது. இன்ஷ¥ரன்ஸ்
தொழிலால் கோடீஸ்வரனாக முடியும் என்ற ஒரு மனப்பிராந்தியை இன்ஷ¥ரன்ஸ் தொழிலின் மகாகுருமார் அப்போது தோற்றுவித்து
விட்டனர்.
இன்னொரு பக்கம் மோட்டிவேஷனல் குருமார். அவர்கள் கொடுக்கும்
மோட்டிவேஷனல் பயிற்சியால் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தினார்கள்.
இன்ன கற்களை அணிந்துகொண்டால் வாழ்க்கையில் வெற்றியைத் தவிர வேறு எதுவும் இருக்காது என்று இன்னொரு பக்கம்.
இன்ன ஹோமத்தைச் செய்தால் வானத்தையே வில்லாக வளைக்கலாம் என்பது மற்றொரு பக்கம்.
பெரும்பணத்தைச் செலவிட்டு, நிறையப் பொருள்களை நெருப்பில் போட்டு, டன் கணக்கில் நெய்யை ஊற்றி, பல சிக்கலான சடங்குகளுடன் நீண்ட நேரத்துக்கு ஆடம்பரமாகச் செய்யப்படும் ஹோமங்களும் பூஜைகளும் அபிஷேகங்களும் மட்டுமே தெய்வ அருளை மிக அதிக அளவில் விரைவில் பெற்றுத்தரமுடியும் என்று மக்கள் நம்ப வைக்கப் பட்டனர்.
அது ஒரு Sure-fire Method என்று மக்கள் நம்பவைக்கப்பட்டனர்.
அவர்கள் சொன்ன அந்த Sure-Fire, அவர்கள் போட்டுவைத்த பெரும்
ஹோமகுண்டத்தில்தான் இருந்தது என்பதை மக்கள் உணரவில்லை.
கோயில்களால் பக்தி வளர்கின்றது என்ற நம்பிக்கை ஒரு பக்கம்.
இவற்றையெல்லாம் நம்பிக்கொண்டு ஒருவிதமான சொகுசான உணர்வுடன் திருப்தியாகப் பெரும்பான்மையான மலேசியத் தமிழர்கள் இருந்துவந்தார்கள்.
இதே மாதிரியான இன்னும் பல நம்பிக்கைகள்.
இவையெல்லாமே சிலவகையான பாரடைம்களை பெரும்பான்மையான மலேசியத் தமிழர்களிடையே தோற்றுவித்தன.
இவர்களில் பலர் எதையும் அதிகமாகவோ ஆழமாகவோ சிந்திப்பதுமில்லை.
வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவது என்ற கோட்பாடு அவர்களிடம் வேறூன்றி விட்டது. அதற்குள் பெரும்பணத்தைச் சம்பாதித்துக்கொள்வது; வசதிகளைத் தேடிக்கொள்வது; அடுத்தவனைக் கெடுப்பது; ஏமாற்றுவது போன்றவற்ரைக் கைக்கொள்ளுதல்.
சமஸ்கிருதத்தில் 'மௌட்டீகம்' என்றொரு சொல் இருக்கிறது.
இந்தச் சொல்லை நான் முதன்முதலில் அறிந்துகொண்டது சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத்திடமிருந்து.
ஈ.வெ.கி.சம்பத் என்பவர் சுயமரியாதை இயக்கம், திராவிடக் கழகம்,
திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் முன்னணித் தலைவர்களில் ஒருவர்.
தமிழ் தேசியக்கட்சி என்னும் கட்சியை இன்னொரு மூத்த தலைவராகிய நாவலர் நெடுஞ்செழியனுடன் சேர்ந்து ஆரம்பித்து, பிற்காலத்தில் காங்கிரஸில் சேர்ந்துவிட்டார்.
அருமையான குரல் வளம்; அற்புதமான சொல்லாற்றல்; ஆற்றொழுக்கான பேச்சு. சம்பத்துடைய பேச்சில் அதிகம் அடுக்கு மொழிகள் இருந்ததில்லை.
அவருடைய தந்தையார் ஈவெ கிருஷ்ணசாமி நாயக்கர்.
தந்தை பெரியாருடைய அண்ணன்.
1927-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுயமரியாதை இயக்கத்துக்கு ஆதரவு தேடுவதற்காகவும் 'விடுதலை' பத்திரிக்கைக்கு சந்தா சேர்ப்பதற்காகவும் மலாயா வந்திருந்தார்.
என்னுடைய தந்தையார் சின்னமுத்து பிள்ளையும் அவருடைய அண்ணன் பெரியையா பிள்ளையும் அவரை இந்தோனீசியாவுக்கு வரவழைத்தனர். அங்கு என்னுடைய தந்தையார் 45 சந்தாக்களை இரண்டே நாட்களில் சேர்த்துக் கொடுத்தார். சில உரைகளையும் ஆற்றச்செய்தார்.
கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில்தான்.
அப்போதெல்லாம் சுயமரியாதை இயக்கத்தினரை பிராமணர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் 'சூனா மானா' என்றுதான் குறிப்பிடுவார்கள்.
அவர்கள் எந்த அர்த்தத்தில் 'சூனா மானா' என்று குறிப்பிட்டார்கள்
என்பதை ஊகிக்கக் கால்க்யுலஸ் போட்டுப் பார்க்கவேண்டியதில்லை.
ஈவெகி சம்பத்தை நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தேன். அவரைச் சந்திப்பதற்குத் தந்தையார் கூட்டிச் சென்றிருந்தார்.
அவர் ஆற்றிய உரையின்போது அவர் 'மௌட்டீகம்' என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
அதைப்பற்றி கேட்டபோது அதற்கு அவர் சுருக்கமான விளக்கம் சொன்னார்.
இப்போது அந்தச் சொல்லுக்கு அர்த்தத்தை என்னிடம் கேட்டால் நான் இப்படித்தான் சொல்வேன்.
"மூடத்தனம், முட்டாள்த்தனம், கேணத்தனம், கொங்காத்தனம்,
கோணங்கித்தனம், தெங்கணத்தனம், பேக்குத்தனம், பேமானித்தனம்,
ஏமாளித் தனம், கோமாளித் தனம், சொங்கித்தனம், அசட்டுத்தனம், அசமந்தம், புரியாத்தனம், போன்ற தன்மைகள் அனைத்துமே ஒன்று சேர்ந்தால் ஏற்படும் தன்மைதான் 'மௌடீக்கம்' என்பது.
ஆதிசங்கரர் பாடிய 'பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே" என்பதில் உள்ள 'மூட' என்னும் சொல்லிலிருந்து தோன்றியதுதான் 'மௌட்டீகம்'.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
No comments:
Post a Comment