Tuesday, April 7, 2015

PREDICTIONS

 ஜோதிட பலன்




     சில ஆண்டுகளுக்கு முன்னர் 'மகவோட்டம்' எழுதும்போது தூமகேது எனப்படும் வால்நட்சத்திரத்தைக் குறிப்பிட்டிருந்தேன். 
தூமகேது என்றால் 'புகை கிரகம்' என்று அர்த்தம்.
'கேது' என்பது பொதுவாகக் கிரகத்தைக் குறிக்கும். எப்படியோ ராகுவின் உடற்பகுதியின் பெயராக மாறிவிட்டது. 
தூமகேது தோன்றுவது குறித்து பல நம்பிக்கைகள் இருந்தன. தீயபலனைத் தருபவை என்றே நம்பினார்கள்.

கி.பி 68 ஆம் ஆண்டு ஒரு தூமகேது தோன்றியது. அவ்வமயம் வரலாற்றிலேயே மிகுந்த அரக்கமனம் படைத்த கொடுங்கோலர்களின் வரிசையில் இடம்பெற்று விட்ட நீரோ மன்னன் ரோமப் பேரரசை ஆண்டு வந்தான். அரசனுக்கு ஆபத்து நேரும் என்று சொல்லக் கேள்விப்பட்ட நீரோ, கதிகலங்கிப் போய் தன் நாட்டிலிருந்த அரச மரபினரையும், பிரபுக்களையும் கொலை செய்ய ஆரம்பித்தான். இவ்வாறு செய்தால் தூமகேதுவின் இரத்த தாகம் அடங்கி, அது திரும்பிப் போய்விடும் என்றும், தான் மட்டும் தப்பித்து 
விடலாம் என்றும் நம்பினான்.

அது என்னவோ! சொல்லி வைத்தாற் போல போய்விட்டது... நிம்மதிப் பெருமூச்சு விட்ட நீரோ மன்னன் தன்னுடைய ஆஸ்தான சோதிடனாகிய பேபிலஸ¤க்கு மிக நல்ல முறையில் பரிசளித்தான். 

இருப்பினும், சில ஆண்டுகள் கழித்து தன்னுடைய சொந்தப் பாதுகாப்பாளர்களாலேயே கொலை செய்யப்பட்டு ஒழிந்தான்.

எல்லா சோதிடர்களும் பேபிலஸைப் போல் கொடுத்து வைத்தவர்களில்லை. 
நீரோவின் பாட்டனாகிய டைபீரியஸ் தனக்குக் கெட்ட பலன்களைக் கூறிய தன்னுடைய ஆஸ்தான சோதிடனைக் கைகளையும் கால்களையும் கட்டி ஆற்றில் வீசி எறியச் செய்தான்.

பதினொன்றாம் லூயி மன்னன் பிரஞ்சு நாட்டை ஆண்ட சமயத்தில், அவனுடைய மிக முக்கியமான காதலி ஒருத்தியின் இறப்பை முன்கூட்டியே அவனுடைய ஆஸ்தான சோதிடன் கூறினான். 
அதன்படியே விரைவில் அவள் இறந்தாள். 
மனவருத்தமுற்ற லூயியோ சோதிடனின் கருநாக்கிலிருந்து பிறந்த வாக்கு அவளைக் கொன்று விட்டது என்று நம்பினான். 
ஆகவே, தன்னுடைய குண்டர் படையை அரசவையில் தயாராக இருக்கச் செய்துவிட்டு, சோதிடனை சபைக்கு வரவழைத்தான். 
லூயி சைகை காட்டியவுடன், குண்டர்கள் சோதிடனைப் பிடித்து ஒரு சாக்குப் பையில் போட்டுத் தைத்து, ஸெயின் ஆற்றில் எறிந்துவிட வேண்டுமென்று  அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். 
தன் முன் வந்த சோதிடனிடம் அரசன், "நீ மற்றவர்களின் ஆயுளை நிர்ணயம் செய்கிறாயே..! நீ எவ்வளவு நாட்களில் இறப்பாய் என்பதை உன்னாலேயே கூற முடியுமா...?'' என்று கேட்டான்.
சோதிடன் சுதாரித்துக்கொண்டான்.
கேள்வியின் தன்மை அப்படி. 
ஏன் அரசன் கேட்கிறான் என்பதன் காரணத்தை உணர்ந்துகொண்டு விட்டான்.
இதற்கெல்லாம் சோதிடம் தேவையில்லையே.
Common Sense என்பார்களே. அது இருந்தால் போதும். அது அந்த சோதிடனிடத்தில் நிறைய இருந்தது. 

அதற்கு அந்த சோதிடன், 
"அரசே! விண்மீன்களும் கோள்களும் கூறுவதைத்தான் நான் தங்களிடம் கணித்துக் கூற முடியும்.... வேறெதையும் நான் கூற முடியாது. இந்த நாட்டின் அரசன் இறப்பதற்குச் சரியாக மூன்று நாட்களுக்கு முன்னதாக நான் இறந்து 
விடுவேனென்று விண்மீன்களும் கோள்களும் கூறுகின்றன.." என்றான்.

லூயி மிகவும் யோசித்துவிட்டு, விஷப் பரீட்சைகள் எதற்கு என்று சைகை காட்டாமல் இருந்துவிட்டான்.
அதிலிருந்து சோதிடனுக்குச் சகலவிதமான வசதிகளையும் அரண்மனையிலேயே செய்துகொடுத்து, தன்னுடன் வைத்துக்கொண்டு, அரச வைத்தியர்களை அவனுக்கென்று நியமித்து வைத்தான். 
அத்துடன் நில்லாமல் சோதிடனின் உடல்நிலை, மனநிலை, வசதிகள் முதலியவைகளை அக்கறையுடன் அடிக்கடி விசாரித்த வண்ணம் இருக்கலானான்.

டைபீரியஸ் மாதிரி ஆட்கள் இல்லாததாலோ என்னவோ, மலேசியாவில் தற்சமயம் லக்கனம் கணிப்பது முதல் ராகு காலம் நிர்ணயிப்பது வரை தவறாகக் கணித்துக்கொண்டும். விபரீத பலன்களைக் கூறிக் கொண்டும் பயமுறுத்திக் கொண்டும் பணம் பண்ணிக் கொண்டும் பலர்  இருக்கிறார்கள். 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Monday, March 30, 2015

LOOT AND INFLATION

வரலாற்றில் பணவீக்கம் + லூட்டி

தமிழ் அரசர்கள் மற்ற நாடுகளின் மீது படையெடுத்து வென்று திரும்பும் போது அந்த நாடுகளிலிருந்து பெரும் பொருளைக் கைப்பற்றிக் கொண்டு வருவார்கள். கப்பமாகவும் ஆண்டு தோறும் வசூலிப்பார்கள். 
இதனால் வென்ற நாட்டிலும் வெல்லப்பட்ட நாட்டிலும் இருவேறு விதமான பொருளாதார நிலைக்குலைவுகள் ஏற்படும்.

ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் பாண்டிய நாட்டில் ஒரு பொற்காசுக்கு ஆயிரம் வாழைப்பழங்கள் அல்லது பதினோராயிரத்து இருநூறு வெற்றிலை அல்லது பத்தாயிரத்து நூறு கொட்டைப்பாக்கு வாங்க முடிந்தது. 
அக்காலத்தில் பாண்டிய நாட்டில் நிலவிய மார்க்கெட் நிலவரம் அப்படி! 
வெற்றிகரமான படையெடுப்பின் முடிவில் கொண்டுவந்த நிதிக் குவியலில் (War Booty  என்று கூறுவார்கள்) பெருமளவு பொன் இருக்கும். நாட்டில் திடீரென்று ஏற்படும் இந்தப் பெரிய அளவு பொன்னின் புழக்கம் பயங்கரமான பணவீக்கத்தை ஏற்படுத்திப் பொருளாதாரத் தடுமாற்றத்தை விளைவிக்கும். 
'காசு ஒன்றுக்கு ஆயிரம்' என்ற விலைக்கு விற்கப்பட்ட  வாழைப்பழம் ஒன்றை காசுகள் ஆயிரம் கொடுத்து வாங்க நோ¢டும். 
பழைய தமிழகத்தில் அடிக்கடி இப்படிப்பட்ட இன்பி·லேஷன் (Inflation) ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.

எப்படி சமாளித்தார்கள்?

"இப்படியெல்லாம் நடந்ததா?" என்று சிலர் கேட்கக்கூடும். "தமிழ் மன்னர்கள் நீதி தவறாதவர்களாயிற்றே! தர்மயுத்தம் புரிபவர்களாயிற்றே!" என்றெல்லாம் சொல்வார்கள். ஏனெனில் அவர்கள் அவ்வாறு நம்புவதற்கு, எண்ணுவதற்கு - பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த Mind-set செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. வரலாற்று நாவலாசிரியர்கள் இதற்குப் பெரும் காரணமாக இருக்கிறார்கள். ஆரம்ப காலத்து திராவிட முன்னேற்றக் கழகம் இந்த மாதிரியான கருத்துக்களைப் பரப்பியது. 
நாவலிஸ்டுகள் தமிழ் மன்னர்களுக்கு எதிரியாக உள்ள கலிங்கர், சாளுக்கியர் போன்றோரை மகாக் கொடுமையாளர்களாகச் சித்தரிப்பார்கள். 
தமிழ் மன்னர்களிடையேகூட ஹீரோவாக இருக்கும் தமிழ் மன்னன் நல்லவனாகவும் வல்லவனாகவும் அவனுக்கு எதிரியான தமிழ் மன்னன் கோழையாகவும் கெட்டவனாகவும் சித்தரிக்கப்படுவார்கள். 
இதை வைத்து ஓர் ஆராய்ச்சியே செய்யலாம்.
கல்கி, சாண்டில்யன், அகிலன் ஆகியோரின் நாவல்களை ஆராயலாம்.
இதெல்லாம் ஒரு Paradigm Situation. 
தமிழ் மன்னர்கள் நார்மலான மன்னர்கள். மற்ற மன்னர்களிடம் இருந்த கொடுமை, கொடூரம், வக்கிரம், பொறாமை, வஞ்சனை, நன்றி மறப்பது போன்ற - மன்னர்களுக்குரிய ராஜலட்சண ராஜரீக குணங்கள் மற்ற இனத்து மன்னர்களைப் போலவே இருந்தது. 
இதில் வெட்கப்படவோ, வேதனைப் படவோ என்ன இருக்கிறது. 
இப்போது மாதிரியேதான்....... 
Kill... Or Get Killed.

அவர்கள் போர் தொடுத்துச்செல்லும் நாட்டைக் கொள்ளையிட்டுச் சூறையாடி நெருப்பும் இட்ட விபரத்தை அவர்கள் விலாவாரியாகக் கல்வெட்டில் வெட்டியும் வைத்திருக்கிறார்கள்; அழகாகப் பாடியும் வைத்திருக்கிறார்கள். 
விஸ்வாக்காம்ப்லெக்ஸில் 'வேளம் ஏற்றுதல்', 'தமிழக வரலாற்றை மாற்றிய போர்' ஆகிய கட்டுரைகளில் விபரங்களைத் தெளிவாகக் காணலாம்.
தண்டெடுத்துச் சென்ற நாட்டைச் சூறையாடுதல் என்பது பழங்கால போர் மரபுகளில் ஒன்று.
Loot And Arson என்றொரு சொற்றொடர் உண்டு.  இந்த ஆணையை அரசனோ படைத்தளபதியோ இட்டுவிட்டால் போர் வீரர்கள் இஷ்டப்படி செய்துகொள்ளலாம். தோற்ற மக்களைக் கொல்லலாம்; அடிமைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளலாம்; கொள்ளையடிக்கலாம்; ஊரையே 
கொளுத்திவிடலாம்.
தமிழில் 'லூட்டியடித்தல்' என்றொரு சொல் இருக்கிறது. 'Loot அடித்தல்' என்பதைத்தான் இப்படி நம்ம ஆட்கள் சொல்கிறார்கள்.
லூட் அடித்த பொருள்களை அரசனிடமோ அல்லது தண்டெடுத்துச் சென்ற தண்டநாயகனிடமோ ஒப்படைக்க வேண்டும். 
அரசனுக்குரிய பங்கு, தளபதிகளுக்குரிய பங்கு என்று எடுத்துக்கொண்டு மீதியை லூட் அடித்த போராளிக்குக் கொடுப்பார்கள்.
இது உலக வழக்கு. 
War Booty என்பது தோற்ற நாட்டிடமிருந்து கைப்பற்றிய பொருள். 
இது யுத்த தர்மப்படி நியாயமான விஷயம். 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$