Tuesday, December 16, 2014

QUIRKS OF FATE


விதியின் விளையாட்டு





விதி என்பது எப்படி எப்படியெல்லாம் வேலை செய்யும் என்பது 
நினைப்பதற்கே விந்தையாகவும் விசித்திரமாகவும் அற்புதமாகவும் இருக்கும். 
இரண்டாம் உலக யுத்தத்தின்போது நடந்த சில நிகழ்ச்சிகளை 
ஏற்கனவே அகத்தியரில் எழுதியிருக்கிறேன். 

போலந்தின் தலைநகர் வார்ஸாவில் யூதர்கள் வசித்த கெட்டோ 
என்னும் சேரியிலிருந்து 1940-ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கானவர்களை 
ஜெர்மன் புயல் படையினர் கைது செய்து கொண்டுபோய் பல இடங்களில் 
உள்ள கூட்டுச்சிறைகளில் அடைத்துவைத்தார்கள். அந்த ஆறாண்டுகளில் 
அறுபது லட்சம் யூதர்கள் அழிக்கப்பட்டுவிட்டனர். வார்ஸாவில் அவர்கள் 
கைதாக்கப்பட்டு நடத்திச்செல்லப்படும்போது படம் எடுத்திருக்கிறார்கள். 
அதில் ஒரு சிறுவன் - ஆறு வயதுக்குள் இருக்கும்- தன் சிறிய கைகளை 
ஸரெண்டர் முத்திரை காட்டி, தூக்கிச்செல்வதை அந்தப் படத்தில் 
காணலாம். 
அறுபது லட்சம் பேர் மாண்டிருக்கின்றனர். 
அந்தச் சிறுவன் யுத்தம் முடியும்போது உயிருடன் இருந்தான். 

1944-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6-ஆம் தேதியை D-Day என்று 
அழைப்பார்கள். அந்தத் தினத்தன்று ஒன்பதாயிரம் கப்பல்களில் இரண்டு 
லட்சம் போராளிகள் ஆயிரக்கணக்கான டாங்க்குகள் போன்ற 
சாதனங்களுடன் நாட்ஸி ஜெர்மானியர் கையிலிருந்த பிரான்ஸ் நாட்டில் கரையிறங்கினார்கள். 

வரலாற்றிலேயே மிகவும் உக்கிரமாக நடைபெற்ற போர்களில் 
அதுவும் ஒன்று. 
அந்தப் போரின் ஆரம்பக் கட்டத்திலேயே சில ஜெர்மன் படை
வீரர்கள் பிடிபட்டனர். 
      
அவர்களில் சில கொரியாக்காரர்கள் இருந்தனர். அவர்களைப் 
பிடித்த அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சி. ஏனெனில் கொரியாக்காரர்கள் அங்கிருப்பதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை. அந்தக் கால 
கட்டத்தில் கொரியா ஜப்பானின் காலனி நாடாக அடிமைப்பட்டுக் 
கிடந்தது. ஜப்பானியர்களின் இம்ப்பீரியல் ஜப்பனீஸ் படையில் லட்சக்கணக்கான கொரியர்கள் இருந்தனர்.
அவர்கள் நாட்டிலிருந்து எண்ணாயிரம் மைல்களுக்கு அப்பால் ஜெர்மன் வெய்ர்மா·க்ட் படையின் யூனி·பார்ம் அணிந்துகொண்டு 
கொரியர்கள் பிரான்ஸ் நாட்டின் நார்மண்டிக் கரையில் என்ன 
செய்கின்றனர்?
விசாரணை செய்யும்போது அவர்களின் கதை தெரிந்தது.

1936-ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவின் வடபகுதியாக இருந்த 
மஞ்சூரியாவைப் பிடித்தது. அது ரஷ்யாவின் எல்லைப்புறம். ரஷ்யாவுடன் அந்தச் சமயத்தில் மோதல் ஏற்பட்டது. மஞ்ச்சூரியாவுக்கு ஜப்பான் 
அனுப்பிய படையில் இந்தக் கொரியர்கள் இருந்தனர். ரஷ்யப்படையிடம் அவர்கள் பிடிபட்டனர். 
ஜெர்மனி ரஷ்யாவின்மேல் திடீரென்று படையெடுத்து வெற்றி மேல் வெற்றி பெற்றது. ரஷ்யர்களுக்கு ஆள் சேதம் அதிகம்.
      அப்போது ரஷ்யர்களுக்கு ஆள் பலம் வேண்டியிருந்ததால் 
ரஷ்யப்படையில் மேற்படி கொரியர்களைச் சேர்த்து ஜெர்மானியர்களுக்கு எதிராகப் போரிட வைத்தனர். 
      அவ்வாறு அவர்கள் போரிட்டபோது ஜெர்மானியரிடம் பிடிபட்டனர். அவர்களை என்ன செய்வது என்று ஜெர்மானியர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் ஜப்பானியப் படையில் இருந்தவர்கள். ரஷ்யர்களிடம் 
பிடிபட்டதனால் ரஷ்யப் படையில் சேர்ந்து போரிடுமாறு ஆணையிடப் பட்டனர். அதன் பின்னர் ஜெர்மனியிடம் பிடிபட்டனர். 

அந்தச் சமயத்தில் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனி பின்வாங்கிக்
கொண்டிருந்தது. ஸ்டாலின்கிராடு முதலிய பல இடங்களில் லட்சக்கணக்கான ஜெர்மன் போராளிகள் இறந்து போய்விட்டனர். 
இன்னும் பலர் காயமடைந்தனர். லட்சக்கணக்கானவர்கள் சரண
டைந்திருந்தனர். ஆட்சேதமும் பொருட்சேதமும் மிக அதிகம்.
      போதாததற்கு அமெரிக்கா, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஆகியவற்றின் 
படைகள் விரைவில் ·பிரான்ஸ் நாட்டில் கரையிறங்கவிருப்பதால் அங்கு படைகளை அதிகமாக அனுப்பவேண்டியிருந்தது. படைகளுக்கு ஆள்தேவை. ஒவ்வோர் ஆளும் தேவைதான். 
ஜப்பான் ஜெர்மனுக்கு நேசநாடு என்பதால் அந்தக் கொரியார்களை 
ஜெர்மன் படையில் சேர்த்துக்கொண்டனர்.
அவர்களின் ராசி அமெரிக்கப் படையினரிடம் சிக்கிக்கொண்டனர். 

அதன் பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் எனபது தெரியவில்லை. 
     
       இப்படியும் இருக்கலாமோ?

1945-இல் ஜப்பான் சரணடைந்துவிட்டது. 
கொரியா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 

ரஷ்யா/சீனாவின் ஆதிக்கத்தில் வடகொரியா; அமெரிக்காவின் 
ஆதிக்கத்தில் தென்கொரியா. 
நம்ம கொரியாக்காரர்கள் தென்கொரியாப் படையில் சேர்க்கப்பட்டு 
சண்டையிட்டிருக்கலாம். 
அப்போதும் விதி விடாமலிருந்திருக்கும்.
வடகொரியா/சீனா படையிடம் அவர்கள் சிக்கியிருக்கலாம்.

சீனா படைகள் அருணாசல் அல்லது லடாக்கில் சண்டையிட்ட
போது அவர்கள் சீனப்பட்டாளத்தில் சேர்ந்து சண்டையிட்டிருக்கலாம். 
அப்போது இந்தியாவிடம் சிக்கியிருக்கலாம்.
அத்துடன் அவர்கள் ரிட்டயர் ஆகிவிட்டிருப்பார்கள். 
1936-இலிருந்து 1962-வரைக்கும் 26 ஆண்டுகள். 
ரிட்டயர்மெண்டு ஏஜ்தான். 
இந்தியாவில் எங்காவது செட்டில் ஆகிவிட்டிருப்பார்களா 
என்று தேடிப்பார்க்கலாம். 
       யார் கண்டது?
       அண்ணாநகர் காலனியில் கூர்க்காவாகக்கூட வேலை 
பார்த்திருக்கலாம்.
       சத்தியராஜே கூர்க்கா வேஷம் போடும்போது இவர்களுக்கென்ன? 
அசப்பில் பார்க்கும்போது இவர்களும் கூர்க்கா மாதிரியேதான் 
இருப்பார்கள்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$