தெலுங்கு சோழர்கள்
சங்க காலச் சோழர்களில் மிகவும் புகழ் வாய்ந்தவர் கரிகால்
பெருவளத்தான் என்னும் கரிகால் சோழர். இவர் கிமு 200-இல் இருந்தார்
என்ற பொதுவான கருத்து ஆராய்ச்சியாளர்களிடையே உண்டு.
வடநாடுகளை நோக்கிப் படைகளை அனுப்பி, இமயமலை வரைக்கும்
சென்று அங்கு சோழர்களுடய புலி இலச்சினையைப் பொறித்தார். செல்லும் வழியில் உள்ள நாடுகளையும் வென்றிருப்பார். எந்தெந்த நாடுகளை வென்றார் என்பதற்கு ஒன்றும் தகவல்கள் இல்லை.
ஆனால் ஒன்று.
பிற்காலத்தில் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் சோடர் என்னும்
மரபினர் ஆண்டு வந்தனர். அவர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மரபினர் இருந்தனர். அவர்கள் அனைவருமே தங்களைக் கரிகால் சோழரின்
பரம்பரையினர் என்றே சொல்லிக்கொண்டனர்.
இவர்கள் கிருஷ்ணை ஆற்றுப் பிரதேசங்கள், நெல்லூர், கடப்பை
முதலிய வட்டாரங்களில் சிறு சிறு நாடுகளை ஆண்டுகொண்டிருந்தனர்.
கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாவது இவர்கள் இந்தப் பிரதேசங்களை ஆண்டு வந்திருக்கின்றனர்.
விஜயாலயன் மரபினர் ஆண்டு வந்த சோழசாம்ராஜ்யத்தின் கீழ்
சிற்றரசர்களாக இந்த மரபினர் அனைவருமே விளங்கினர். அதுவும்
சாளுக்கிய சோழராகிய முதலாம் குலோத்துங்க சோழர், சோழ
சாம்ராஜ்யாதிபதியாகிய பின்னர் தம்முடைய உரிமை நாடாகிய வேங்கி
நாட்டை ஒரு தெலுங்கு சோடரிடம் ஒப்படைத்தார். அங்கு படையெடுத்த மேலைச் சாளுக்கியர்களுக்கு எதிராக தெலுங்கு சோடர்களுக்குக்
குலோத்துங்கர் பெரும்படையை அனுப்பி உதவினார்.
"மரபினர் மரபினர்" என்று பன்மையில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
எத்தனை மரபுகள்?
இவர்களில் ரொம்பவும் முக்கியமானவர்கள் வேலணாண்டி சோடர்கள்.
கிபி 1076-இலிருந்து கிபி 1216 வரைக்கும் அவர்களுக்குத்
தொடர்ச்சியான வரலாறு இருக்கிறது.
இவர்கள் குண்டூரை ஆண்டவர்கள். பின்னர் வேங்கியில் இருந்தனர் அதன் பின்னர் பித்தாபுரம் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
அந்த காலகட்டத்தில் ஆண்ட ஏழு வெலணாண்டி சோழ மன்னர்களில் மூன்று பேர் ராஜேந்திர சோழன் என்ற பெயரை வைத்திருந்தனர்.
பிற்காலத்தில் பாண்டியர்களுக்கும் காக்கத்தீயர்களுக்கு ஏற்பட்ட
போர்களில் இவர்கள் ரொம்பவும் அடிபட்டனர். முடிவில் காக்கத்தீயப்
பேரரசில் இவர்கள் நாடு அடக்கப்பட்டுவிட்டது.
தெலுங்குச் சோழர்களில் இன்னொரு மரபினர் ரேணாண்டுச் சோடர். தற்காலக் கடப்பை மாவட்டத்தை ஆண்டனர். ஆரம்ப காலத்தில்
தனியாட்சியுடன் இருந்தார்கள். பின்னர் கீழைச் சாளுக்கியர்களுக்கு
அடியில் இருக்கலானார்கள். ஏழாம் நூற்றாண்டிலிருந்து பழந்தெலுங்கு
மொழியிலேயே தங்களுடைய கல்வெட்டுக்கள் அனைத்தையும்
முதன்முதலாக எழுத ஆரம்பித்தனர்.
இன்னொரு முக்கியமான மரபு பொத்தப்பிச் சோழர்கள். கடப்பை
வட்டாரத்தில்தான் இவர்களும் ஆட்சி நடத்தினர். பின்னர் சித்தூர்
மாவட்டம் வரைக்கும் அவர்கள் ஆட்சி பரவியது.
ரேணாண்டு சோழர்களுக்குக் கிளை மரபினர் இருந்தனர். அவர்கள்
கோனிடேன சோழர்கள் எனப்பட்டனர். குண்டூரில்தான் இவர்களும்
ஆட்சி புரிந்தனர். சில சமயங்களில் தன்னாட்சியுடன் இருந்தனர். மற்ற சமயங்களில் ரேணாண்டு சோழர்களின் கீழ் ஆட்சி புரிந்தனர். பிற்காலத்தில் காக்கத்தீயப் பேரரசர் கணபதி ரேணாண்டு சோழர்களுடன் கோனிடேன மரபினரையும் தம்முடைய சிற்றரசர்களாக ஆக்கிக் கொண்டார்.
இன்னும் ஒரு மரபினரும் இருந்தனர். நன்னூரு சோழர்கள் என்னும் இவர்களைப் பற்றி அதிகம் தெரியவில்லை.
இன்னொரு முக்கிய மரபு நெல்லூர் சோடர்கள். சோழ பிஜ்ஜனா என்பவர்தான் இந்த மரபில் முதலாவதாக அறியப்படுபவர். இவர்கள் மேலைச் சாளுக்கியர்களின் சிற்றரசர்களாக இருந்தனர். பக்கநாடு என்னும் பகுதியை ஆண்டுவந்தனர்.
திக்க சோடர் என்பவர் கிபி 1223-இல் ஆண்டவர். அவர் தம்முடைய படைகளைத் தெற்கு நோக்கிச் செலுத்தி காவிரிக் கரை வரைக்கும்
நாட்டைப் பிடித்துக்கொண்டார்.
அவர்கள் சோழப்பேரரசுக்குப் பெயரளவில் கட்டுப்பட்டவர்கள்.
ஆனால் சுதந்திரமாகத்தான் ஆட்சி புரிந்தனர். ஏனெனில் அப்போது
சோழப் பேரரசராக இருந்த மூன்றாம் ராஜராஜ சோழர் பாண்டிய நாட்டின்
மாறவர்மர் சுந்தர பாண்டியரால் இருமுறை தோற்கடிக்கப்பட்டார்.
பாண்டியநாடு சுதந்திரம் பெற்றது. வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு
மைசூரிலிருந்து ஹோய்சளப் பேரரசர் வீரநரசிம்மர் தம்முடைய
படைகளைக் கொண்டு பல்லவ கோப்பெருஞ்சிங்கன், சுந்தர பாண்டியர்,
அனியங்க பீமச் சோடர் ஆகியோர் அடங்கிய கூட்டணியை வென்று
மூன்றாம் ராஜராஜ சோழரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்.
ஹோய்சள வீரநரசிம்மரின் மகன் சோமேஸ்வரர் பாண்டியர்களுடன்
சேர்ந்துகொண்டு அடுத்து வந்த மூன்றாம் ராஜேந்திர சோழரைத் தாக்கினார்.
இம்முறை தெலுங்குச் சோட திக்கர் ராஜேந்திர சோழருக்கு
உதவியாகத் தம் பெரும்படைகளுடன் வந்து ஹோய்சளரையும்
பாண்டியரையும் தாக்கி வென்றார். ஆனால் தொண்டை மண்டலத்தைத் தமக்கே வைத்துக்கொண்டார்.
அத்துடன் தமக்கு 'சோழ ஸ்தாபனாச்சார்யன்' என்ற விருதுப் பெயரையும் சூட்டிக்கொண்டார்.
ஆனால் திக்க சோடரின் மகன் மனுமசித்தியின் காலத்தில் நெல்லூர்
சோடர்கள் வலுவிழந்தனர்.
கிபி 1260-இல் மனுமசித்தி சோடருக்கும் எர்ரகடபாடு நாட்டுச்
சிற்றரசர் கட்டமராஜுவுக்கும் இடையே மிகக் கடுமையான பூசல்
ஏற்பட்டது.
காரணம்?
அந்த வட்டாரத்தில் பசுமையான பெரிய மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. இவை யாருக்கு உரிமையானவை என்பதில் பூசலும் மோதலும் ஏற்பட்டன. அந்தப் பெரும்போரில் மனுமசித்தி வென்றாலும் அவருடைய முக்கிய தளபதி இறந்துபோனார். இந்தப் போரால் நாடு பெரும் சேதத்தை அடைந்தது. இதனால் மனுமசித்திச் சோடர் இறந்து போனார்.
மனுமசித்திச் சோடரின் இறப்புக்குப் பின்னர் நெல்லூர் நாடு தன்னுடைய தனித்தன்மையை இழந்தது. பிற்காலப் பாண்டியர்களுக்கும் காக்கத்தீயப் பேரரசுக்கும் இடையே நடந்த போர்களின் களமாக விளங்கியது. அடிக்கடி கைமாறியது. கடைசியில் காக்கத்தீயப் போரரசுக்குள் கரைந்துவிட்டது.
ஏன் இந்தத் தெலுங்குச் சோடர்களைப் பற்றி எழுதினேன் என்றால்,
கிபி 1076-இலிருந்து கிபி 1248 வரைக்கும் 172 ஆண்டுகள் சோழப்
பேரரசர்கள் எழுவரின் ஆட்சியில் ஸ்திரத்தன்மை விளங்குவதற்கும் அந்த சோழர்கள் நிம்மதியாக ஆட்சி புரிவதற்கும் இந்தத் தெலுங்குச் சோடர்கள் பெரும்பங்கு வகுத்தனர். அவர்கள் இல்லையெனில் சோழப் பேரரசு நீடித்து இருந்திருக்கமுடியாது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$