Wednesday, January 22, 2014

THIRUNEERRU THIRUPADHIGAM



திருநீற்றுத் திருப்பதிகம் 

பின்னணியும் மூலமும் எளிய உரையும்
விளக்கங்களுடன்




தமிழ்ச் சைவசமயத்திலுள்ள மிகச்சிறந்த மந்திர துதிகளில் 
ஒன்றாகக் கருதப்படுவது திருஞானசம்பந்தரின் திருநீற்றுத் திருப்பதிகம். 

இதன் பின்னணி எல்லாருக்கும் தெரியும் என்று ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை. 

சமணர்களை ஒடுக்கி பாண்டிய மன்னரைச் சைவராக்கி, 
அதன்மூலம் பாண்டியநாட்டையும் சைவநாடாக்குவதற்காக சம்பந்தப்
பெருமானார் மதுரைக்கு வந்தபோது, அவர் தங்கியிருந்த திருமடத்திற்கு 
சமணர்கள் நெருப்பிட்டனர். 
அவர் தம்முடைய ஆற்றலால் சிவனை வேண்டி அந்த நெருப்பின் 
தகிப்பை வெப்பு நோயாக்கி, பாண்டிய மன்னருக்கு அனுப்பிவிட்டார். 

வெப்பு நோயைத் தீர்க்க சமணர்கள் எவ்வளவோ முயன்றும் 
முடியவில்லை. 
பாண்டியரின் வெப்புநோயைத் சம்பந்தபெருமான் தீர்த்துவைப்பார் 
என்று பாண்டிமாதேவி மங்கையற்கரசியார் சொன்னதன் பேரில் அவரைப் 
பாண்டியர் வரவழைத்தார்.
பாண்டியனாரின் உடலின் ஒரு பாதியை சமணர்கள் தங்களின் மணி மந்திர ஔஷதங்களால் குணப்படுத்த முயல்வது என்றும் இன்னொரு பாதியை சம்பந்தப்பெருமானார் குணப்படுத்துவது என்பதும் சவால்.

சமணர்கள் முயற்சி செய்த பகுதியில் நோய் அதிகரித்தது. 

அப்போது சம்பந்தபெருமானார் மடைப் பள்ளியிலிருந்து அடுப்புச் சாம்பலை எடுத்துவரச்செய்தார். 

அந்தச் சாம்பலை வைத்து 'மந்திரமாவது நீறு' என்று திருநீற்றுத் திருப்பதிகத்தைப் பாடி, அதற்கு உருவேற்றி, பாண்டியனாரின் உடலில் தடவினார். அத்துடன் அந்தப் பாதியிலிருந்து நோய் நீங்கி சமணர்களின் பாதிக்குச் சென்று இன்னும் கடுமையாக மாறியது. 
அதன்பின்னர் இன்னொரு பாதியிலும் சாம்பலைத் தடவினார். 
நோய் உடனே அகன்றது. 

சமீபகாலம்வரையிலும் மதுரையில் அந்த மடத்தில் மடப்பள்ளிச் 
சாம்பலையே திருநீற்றுப் பிரசாதமாகக் கொடுத்துவந்திருக்கிறார்கள். 
இப்போது அந்த வழக்கம் உண்டா என்பது தெரியவில்லை. 
மதுரைத் தலத்திலேயே அப்படியொரு வழக்கம் இருந்ததாகவும் 
கூறுவார்கள்.
அடுப்படிச் சாம்பலுக்கும் அப்படியொரு மகிமை.
எல்லாமே கைவிசேஷம்தான். நம்பிக்கைதான். பதிகமும் வேலை செய்கிறது. சிவனருள் கைகூடுகிறது. 

1.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு 
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு 
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயன் திருநீறே

மந்திரமாக விளங்குவதும் திருநீறு; தேவர்கள் முதலிய தெய்வங்கள், கணங்களின் மீது விளங்குவதும் நீறு; அழகாக விளங்குவது நீறு; நீறு வணங்கித் துதித்துப் போற்றுதற்கு உரியது; ஆகம தந்திரங்களின் வடிவமாக விளங்குவது நீறு; சமயங்கள், மதங்களின் பொருளாக இருப்பது நீறு; செம்மையான இதழ்கள் கொண்ட வாயை உடைய உமையாகிய அங்கயற்கண்ணியை உடலில் பங்கு வைத்த மங்கைபாகனாகிய 
திருவாலவாயனின் திருநீறே

2.
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத்தருவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப்புனல்வயல் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே

வேதத்தின் உள்ளே விரவி நிற்பது நீறு. 
கொடிய துன்பத்தைத் தீர்ப்பது நீறு. 
மெய்யறிவைத் தருவது நீறு
இழிந்த தன்மையைத் தவிர்ப்பது நீறு
அதன் பெருமைகளை ஓதினால் வேண்டியதைத் தரக்கூடியது 
நீறு.
மெய்யாம் தன்மையில் உள்ளது நீறு
மதுரை நகரம் குளுமையான புனல்களால் சூழப்பெற்றது. 
அந்த மதுராநாயகனான ஆலவாயானுடைய திருநீறு இப்படிப்பட்டது

திருநீற்றுத் திருப்பதிகம் -#3

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
புத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே

முக்தியை அளிப்பது திருநீறு
முனிவர்கள் அணிந்துகொள்வது திருநீறு
சத்தியப் பொருளாக உள்ளது நீறு. திருநீற்றின்மேல் 
ஆணையிட்டுக் கூறும் வழக்கம் இருந்தது. 
தக்கவர்களால் புகழப்படுவது நீறு
புத்தியைக் கொடுப்பது திருநீறு
துதிப்பதால் இன்பத்தைத் தருவது திருநீறு
சித்திகளைக் கொடுப்பது திருநீறு
அத்தகையது திருவாலயான் திருநீறே

திருநீற்றுத் திருப்பதிகம் -#4

காண இனியது நீறு, கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு 
மாணம் தகைவது நீறு, மதியைத் தருவது நீறு
சேணம் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே

பார்ப்பதற்கு இனிமையானது திருநீறு
தன்னை அணிந்துகொள்வார்க்கு அழகைத் தருவது திருநீறு
விரும்பி அணிந்துகொள்வோர் யாவருக்கும் பெருமையைக் 
கொடுப்பது திருநீறு
ஆணவத்தைக் கெடுப்பது திருதிருநீறு
நல்லறிவைக் கொடுப்பது திருநீறு
தேவருலக வழ்வைத் தருவது திருநீறு

திருநீற்றுத் திருப்பதிகம் -#5

பூச இனியது நீறு, புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு, பெருந்தவத்தோர்களுக்கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு, அந்தமதாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவாலவாயான் திருநீறே

பூசிக்கொள்வதற்கு இனிமையானது திருநீறு
புண்ணியமாக விளங்குவது திருநீறு
அதன் பெருமையை எடுத்துப்பேச இனிமையாயுள்ளது 
திருநீறு
பெரும் தவம் புரிபவர்களுக்குப் பற்றுக்களையும் 
ஆசைகளையும் கெடுப்பது திருநீறு
முடிவான பொருளாக உள்ளது திருநீறு
தேசங்கள் முழுவதாலும் புகழப்படுவது திருநீறு
திருவாலவாயன் திருநீறு அப்பேற்பட்டது

திருநீற்றுத் திருப்பதிகம் -#6

அருத்தமாவது நீரு அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தமதாவது நீரு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே

செல்வமாக இருப்பது திருநீறு
வீணான இழிநிலையை மாற்றி இன்பநிலையைத் 
தருவது திருநீறு 
மனத்துன்பத்தைத் தணிப்பது திருநீறு
தேவருலகை வாழவைப்பது திருநீறு 
எக்காரியத்துக்கும் பொருந்தி நிற்பது திருநீறு
புண்ணியம் செய்ய்பவர்கள் பூசிக்கொள்வது திருநீறு
லட்சுமி வசிக்கும் மாளிகைகள் சூழ்ந்துள்ள திருவாலவாயான் 
திருநீறே

திருந்நீற்றுத் திருப்பதிகம் -#7

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொருதரு சூலத்து ஆலவாயான் திருநீறே

திரிபுரங்களை அழித்தது திருநீறு.
(திரிபுரங்களைப் பற்றியும் அவற்றை சிவபெருமான் 
அழித்த கதையையும் கீழ்க்கண்ட இடத்தில் காணலாம் - 

<தமிழ்>
http://www.visvacomplex.com/Thiripura_SammAram1.html

<இங்கிலீஷ்>
http://www.visvacomplex.com/Thiripura_Samharam1%28E%29.html

இம்மை மறுமை இன்பங்களுக்கு உரியது திருநீறு
பழக்கத்தில் அணியப்படுவது திருநீறு
செல்வமாக உள்ளதுடன் வேறு எல்லாப்பேறுகளாகவும் 
உள்ளது திருநீறு
பேருறக்கத்தைத் தடுப்பது திருநீறு
தூய்மை செய்யும் இத்திருநீறு 
இது கூர்மையாக விளங்கும் சூலாயுதத்தைத் தரித்துள்ள 
திருஆலவாய்ப் பெருமானது திருநீறாகும்


திருநீற்றுத் திருப்பதிகம் -#8

இராவணன் மேலது நீறு எண்ணத் தருவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு 
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே

இராவணன் அதன் உடம்பில் அணிந்துகொள்வது திருநீறு. 

 <திருஞானசம்பந்தரின் பதிகங்களில் ஒரு வழக்கு 
உண்டு. எட்டாவது பாடலில் ராவணனைக் குறிப்பிடுவார். 
ஒன்பதாவது பாடலில் திருமாலும் பிரம்மனும் சிவபெருமானுடைய 
அடியையும் முடியையும் காணாத விஷயத்தைக் குறிப்பிடுவார். 
பத்தாவது பாட்டில் சமணர்களையும் பௌத்தர்களையும் 
கண்டனம் செய்திருப்பார். ராவணன் மிகச்சிறந்த சிவபக்தன். 
வெல்லப்படமுடியாதவனாக இருந்தவன். அவனுடைய கர்வத்தை 
ஒடுக்கி, அவனுக்கு வலுமிக்க வரங்களையும் தந்து அருளியவர் 
சிவபெருமான். சிவபக்தனாகிய அவனுடைய உடலில் தரிக்கப்
பட்டிருப்பது திருநீறு.>

இதன் மேல்விளக்கமாகப் பழைய அகத்திய மடல் 
ஒன்று:

 விஸ்ரவாஸ் என்னும் ரிஷி ஒருவர் இருந்தார்.
 அசுரர் குலத்தைச்சேர்ந்த அரசகுமாரி ஒருத்தி அவருடன் 
கூடி வலிமை மிக்க மக்களைப் பெற்றாள். அவர்களில் மூத்தவனாகிய 
தசகண்டனுக்குப் பத்துத்தலைகளும் இருபது கைகளும். 
 அவன் பிரம்மாவை நோக்கி தவமிருந்து வலிமையும் பல 
வரங்களையும் பெற்றான். 
 அவனுடைய அரைச் சகோதரன் - Half-brother-ஐ அப்படித்
தானே சொல்லவேண்டும் - குபேரன். அவனும் விஸ்ரவாஸ¤க்குப் 
பிறந்தவன்தான். ஆனால் தாய் யக்ஷ¢ணி. 

 விஸ்ரவாஸ் ரொம்பவும் தியாக உணர்வும் பரந்த மனப்பான்மையும் 
உள்ளவர். இனவேறுபாடு பார்க்காமல் அசுரப்பெண், யக்ஷப்பெண் என்று 
விதைத்துக்கொண்டே போயிருக்கிறார், பாருங்கள். 
 குபேரன் சிவபெருமானை நோக்கித் தீவிர தவமிருந்து 
லங்காபுரியையும் புஷ்பகவிமானத்தையும் பெற்று சுபிட்சமாக இருந்தான். 

 தசகண்டன் அவனை விரட்டிவிட்டு புஷ்பக விமானத்தையும் 
லங்காபுரியையும் கைப்பற்றிக்கொண்டு இலங்கேஸ்வரன் ஆனான். 

 விரட்டப்பட்ட குபேரன் சிவபெருமானிடம் புலம்பினான். அவர் 
அவனுக்கு அளகாபுரி என்னும் பட்டணத்தையும் நவநிதிகளையும் 
கொடுத்து, தம்முடைய தோழனாக்கிக் கொண்டார்.

 ஒருநாள் தசகண்டன் வடதிசையை நோக்கித் தன் புஷ்பக 
விமானத்தில் சென்றான். எதிரில் கயிலை மலை இருந்தது. அதன்மீது 
விமானம் பறக்காது. ஏனெனில் அதன்மீது சிவசக்தியர் தம்முடைய 
கணங்களுடன் இருந்தனர். ஆகவே கயிலையை அப்படியே பெயர்த்து 
எடுத்து அப்புறமாக வைத்துவிட்டு, விமானத்தைச் செலுத்த நினைத்தான். 
சுற்றிச் செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை. 
 மலையைப் பெயர்க்க முயன்றதுதான் தாமதம். சக்தி சிவனை 
பயந்து கட்டிப்பிடித்துக்கொண்டது. 
 சிவன் கொஞ்சமும் அலட்டிக்காமல் லேசாக, மிக மிக லேசாகத் 
தம்முடைய கால் பெருவிரலை ஊன்றினார். 
 மலை அப்படியே தசகண்டன்மீது உட்கார்ந்து அவனைப்போட்டு 
நசுக்கியது. 
 வலி தாங்காமல் பயங்கரமாக ஓலமிட்டு அலறினான்.
 அதுவரைக்கும் அந்தமாதிரி யாருமே அலறியது கிடையாது. 

 பல ஆண்டுகள் அவ்வாறு நசுங்கிக் கிடந்து, மிகவும் வருந்திக்
கொண்டிருந்தான். அப்போது ஒரு சிவமுனிவர் சும்மா இருக்கமாட்டாமல் 
அவனிடம்வந்து சாமகானப்பிரியனாகிய சிவனை இசையால் போற்றச்
சொன்னார். உடனே தன்னுடைய தலையைக் கொய்து ஒரு கையையும் 
பிய்த்து யாழ் செய்து கைநரம்புகளை மீட்டி வாசித்தான். 

 மனமகிழ்ந்த சிவபெருமான் அவனை விடுவித்ததுமட்டுமல்லாமல் 
முக்கோடி வாழ்நாள் கொண்ட ஆயுளும் பராக்கிரமும் வஜ்ரசரீரமும் 
பாசுபதம் முதலிய அஸ்திரங்களும் கொடுத்தார். யாராலும் வெல்லப்பட
முடியாத வாள் ஒன்றையும் கொடுத்தார். 

 சக்தி சிவனை எதிர்பாராமல் தழுவி ஆலிங்கனம் செய்தததால்தான் 
அதற்கு மூலகாரணனாக இருந்த ராவணனுக்கு இந்த மாதிரியெல்லாம் 
கண்டதனமாக வரங்களையெல்லாம் சிவன் அள்ளிக்கொடுத்தார் என்று 
அங்கிருந்த பூதங்கள் கிசுகிசுத்தன.

 அத்துடனல்லாமல் ஒப்பும் இணையும் இல்லாத அளவுக்கு 
அலறியதால் அவனுக்கு ராவணன் என்ற பெயரும் இட்டார். 
'ராவணம்' என்றால் 'அலறல்'. 

 இருந்தாலும் தம்மைக் கேட்காமல் தன்னிச்சையாக ராவணனுக்கு 
யோசனை சொன்ன அந்த சிவமுனிவரை மனிதனாகப் பிறந்து சிவனாகிய 
தம்மை மறந்து பிறசமயத்தில் உழன்று மீண்டும் தம்மை அடையுமாறு 
செய்தார். அவரும் அவ்வாறே சிவனை மறந்து, பிற சமயத்தில் நுழைந்து, 
பின்னர் சிவனருளால் சூலைநோயால் கஷ்டப்பட்டு, 
"கூற்றாயினவாறு விலக்கிகிலீர்" என்று சிவனிடம் அடைக்கலம் புகுந்து, 
"புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன், பூம்புகலூர் மேவிய புண்ணியனே" 
என்றவாறு சிவனோடு சேர்ந்துகொண்டார். 


மனதில் எண்ணப்பட்டதையெல்லாம் தரக்கூடியது திருநீறு
<சிந்தாமணி என்பது தேவலோகத்தில் இருக்கக்கூடியது. 
மனதில் எதை நினக்கிறோமோ அதைக் கொடுக்கும் 
சக்தி படைத்தது. கற்பக தரு எனப்படும் தெய்வீக மரமும் 
உண்டு. அதனடியில் இருந்து நினைக்கும் பொருள்களைக் 
கொடுக்கும்>.

பராசக்தியின் தன்மையாயிருப்பது திருநீறு
<பராவணம் - பரா வண்ணம்; பரா என்பது பரையாகிய ஆதி 
பரம்பொருளைக் குறிக்கும். பரையின் வண்ணம். சிவனும் 
பரையும் ஒன்றேதான். சிவனின் அருட்சக்தி பரை. இறைவனின் 
திருவருள் பராசக்தி>

அணிந்துகொள்வாருடைய பாவத்தைப் போக்குவது 
திருநீறு

அனைத்தையும் தாங்கி நிற்கும் ப்ருதிவி தத்துவமாக இருப்பது 
திருநீறு.
<தராவணம் - தரை வண்ணம்>

தத்துவங்களாக விளங்குவது திருநீறு

பாம்புகள் வணங்கும் திருமேனியுடைய ஆலவாயான் திருநீறு 
இப்படிப்பட்டது.

திருநீற்றுத் திருப்பதிகம் -#9

மாலொடு அயனறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே

திருமாலும் பிரம்மனும் அறியமுடியாத சிறப்பினையும் 
உடையது திருநீறு 

மேலே உள்ள விண்ணுலகங்களில் வசிக்கும் தேவர்கள் 
தங்கள் உடலில் அணிந்திருப்பது திருநீறு

பொருந்துமாறு உடம்பில் ஏற்படும் துன்பங்களைத் தீர்க்கக்
கூடிய இன்பத்தைத் தருவது திருநீறு

ஆலஹாலம் என்னும் விஷத்தை எடுத்து உண்டு, தம்முடைய 
மிடற்றில் அடக்கிக்கொண்ட திருவாலவாயானுடைய திருநீறு 
இப்பெருமைகளைக் கொண்டது.

திருநீற்றுத் திருப்பதிகம் - #10

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண்திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆலவாயான் திருநீறே

குண்டிகையாகிய நீர்ப்பாத்திரத்தைக் கையில் தாங்கிய 
சமணர்களோடு பௌத்தர்களுடைய கூட்டமும் கண்டு 
கண் திகைக்குமாறு செய்வது திருநீறு

நினைப்பதற்கு இனியது திருநீறு

எட்டுத் திசைகளிலும் இருக்கும் - மெய்ப்பொருளைத் 
தேடிக் கண்டவர்களால் புகழ்ந்து பரவப்படுவது திருநீறு

பிரபஞ்சத்தில் இருக்கும் பற்பல அண்டங்களில் இருப்பவர்களால் 
பணிந்து ஏத்தப்படும் திருஆலவாயான் திருநீறு அப்படிப்பட்டது.

திருநீற்றுத் திருப்பதிகம்
திருக்கடைக்காப்பு

திருச்சிற்றம்பலம்

ஆற்றும் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலவும் பூசுரன் ஞானசம் பந்தன் 
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

வல்லமையும் வெற்றியும் உடைய காளையின் மீது 
எழுந்தருளியிருக்கும் ஆலவாயானுடைய திருநீற்றின் 
பெருமையைச் சீர்காழியில் வாழும் பூசுரனாகிய 
ஞானசம்பந்தனாகிய நான் துதித்துத் தெளிந்து - 
பாண்டியனின் உடலில் பொருந்திய வெப்பு நோயும் கூனும் 
பிறவிப்பிணியும் ஒழியுமாறு கூறிய இந்தப் பத்துப் பாடல்களையும் 
நன்கு பயில்கின்றவர்கள் எல்லா நலன்களுக்கும் உரியவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$