இந்து சமயத்தில் நாஸ்திகம்
கேள்வி:
நம்மிடையே ஒரு சாரார் கடவுள் இருக்கிறார் என்றும் மற்றொரு சாரார் கடவுள் இல்லையென்றும் கூறும் நிலைமை ஏன், எப்படி ஏற்பட்டது?
பதில்:
'அஸ்து' என்றால் இருக்கிறது என்று பொருள். 'ந அஸ்து' என்றால் இல்லை அல்லது இல்லாமல் இருக்கின்றது என்று அர்த்தம். இருக்கிறது என்போர் ஆஸ்திகர், இல்லை என்போர் நாஸ்திகர்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்து சமயத்தில் ஒரு மாபெரும் சரிவு ஏற்பட்டது. பெருமளவில் ஊழல்கள்; மனிதன் மனிதனை மதிக்காத நிலை; சடங்கு சம்பிரதாயங்கள் மூலம் மக்களிடையே சிந்தனை முடக்கத்தைத் தோற்றுவித்து விட்டனர். சமுதாயத்தில் ஒரு பிற்போக்குவாதம் நீடித்து நிற்க ஆரம்பித்தது.
அந்த நிலையைத் தகர்ப்பதற்குப் பல சிந்தனையாளர்கள் தோன்றினர். சமுதாய வாழ்வை முடக்கிவைத்துக்கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளினின்றும் மக்களை விடுபடச் செய்வதற்காகப் பலவித முயற்சிகளை மேற்கொண்டு பலவித வழிகளைக் கண்டுபிடிக்கலாயினர்.
இந்து சமயத்துக்கு ஆணிவேராக விளங்குபவை நான்கு வேதங்கள். அந்த வேதங்களை அனுசரித்து மேலும் ஆறு நூல்கள் உள்ளன. அவற்றை அங்க
நூல்கள் என்பர். சடங்கு என்னும் சொல்லும் சாங்கியம் என்ற சொல்லும் இந்த ஷட் அங்கம் என்னும் சொல்லிலிருந்து ஏற்பட்டவைதாம். வேதங்கள் நான்கினின்றும் தோன்றிய பகுதி நூல்களாக பிராமணங்கள், ஆரண்யகங்கள், கல்ப்ப சூத்திரங்கள், உபநிஷதங்கள் ஆகியவை விளங்கின. இவை தவிர தர்ம நூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஏற்பட்டன. பிராம்மணர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. சமுதாயத்தின்மீது இரும்புப் பிடியை அந்த வர்க்கத்தினர் போட்டு விட்டனர். வேதங்களில் கூறப்பட்டுள்ள தத்துவக் கருத்துக்களைவிட, அவற்றில் காணப்படும் தெய்வங்களை எளிமையாகத் துதிக்கும் முறைகளைவிட, அவற்றில் உள்ள வாழ்வியல் உண்மைகளைவிட அவற்றிலே காணப்படும் யாகங்கள் சடங்குகள் தட்சணைகள் போன்றவையே முக்கியத்துவம் பெற்றன.
இந்தத் தேக்கநிலை மீது பல துறைகளைச் சேர்ந்த பல அறிஞர்களும்
ஞானியரும் சித்தர்களும் ரிஷிகளும் பல்முனைத் தாக்குதல்களை நடத்தினர்.
அவர்களில் புத்தர் மஹாவீரர் போன்றோர் வேதங்களை அறவே ஒதுக்கி மறுத்து, சடங்குகளைப் புறக்கணித்து, புதிய கோட்பாடுகளுடன் புதிய சமயங்களைத் தோற்றுவித்தனர்.
புத்தர் பெயரால் தோற்றுவிக்கப்பட்ட மதத்தில் கடவுள் கொள்கை
கிடையாது. வேதங்களும் கிடையாது. தம்மபாதா போன்ற வேறு பல நூல்களை அவருடைய சீடர்கள் ஏற்படுத்திக்கொண்டவர்.
சமண மதத்தில் அருகன், ஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான்
போன்ற பெயர்களால் வழங்கப்படும் ஓர் இறைவனையும் அவனுக்குப் பரிவார சக்திகளாகப் பல தெய்வங்களையும் வணங்கினர். வேதங்களுக்குப் பதில் இவர்கள் ஸ்ரீபுராணம் என்னும் நூலையும் இன்னும் பல நூல்களையும் ஏற்படுத்திக் கொண்டனர்.
வேதங்களின் அடிப்படையில் உள்ள சம்பிரதாயங்களில் கர்ம காண்டம், ஞான காண்டம் என்ற இரண்டு வகைகள் இருந்தன.
கர்ம காண்டத்தைக் கடைபிடிப்பவர்களைப் 'பூர்வமீமாம்சகர்'கள் என்பர். வேதங்களில் சொல்லப்பட்ட சடங்குகள் கடமைகள் ஆகியவற்றை மட்டுமே இவர்கள் சிரத்தையாகச் செய்தனர். பூர்வமீமாம்சையில் கடவுள் கொள்கையே கிடையாது. இக்கோட்பாட்டை நிறுவியவர் ஜைமினி என்னும் பெரிய ரிஷி.
குமரில பட்டர், மண்டனமிஸ்ரர் போன்ற மிகப் பெரும் அறிஞர்கள் இந்த
மதத்தில் இருந்தனர். இவர்களை ஆதிசங்கரர் வென்று கடவுள் கொள்கையை ஏற்றுக் கொள்ளச் செய்தார்.
வேதங்களை ஏற்றுக் கொள்ளாத இன்னொரு சமயமும் இருந்தது அதன் பெயர் 'லோகாயாதம்'. 'கண்டதே காட்சி; கொண்டதே கோலம்; அனுபவிப்பதே உண்மை நோக்கத்தின் வழி. நோக்கத்தின் வழி காரணம்; காரணத்தால் காரியம்; காரியத்தின் மூலம் பலன்; இவ்வாறுதான் தர்க்க ரீதியாக அதன் தத்துவங்கள் செல்லும்.
இதில் இறைவனுக்கே இடமில்லை. பச்சையான நாத்திக வாதம். இந்த மதத்தில் உயிர், இறைவன், மறுமை, பாவம், புண்ணியம் கற்பு முதலிய பல விஷயங்கள் கிடையாது. வல்லவன் வகுத்ததே சட்டம், வழி, நியதி, நீதி எல்லாம். உடலும் உலகுமே மெய்.... இப்படியாக மிக விரிவாகவும் ஆணித்தரமாகவும் இவ்வாதம் விவரித்துக் கொண்டே போகும்.
இதைச் சாருவாகம் என்று அறிஞர்கள் அழைத்தனர்.
இந்த வாதத்தில் மேலும் ஆறு உட்பிரிவுகள்இருந்தன. அவற்றிலொன்று
பார்ஹஸ்பத்தியம் எனப்படுவது.
அசுரர்களின் குருவாக சுக்கிரன் இருந்தார். அசுரர்களின் பயங்கர விரோதிகள் தேவர்கள். அவர்களின் குருவானவர் பிரஹஸ்பதி. சுக்கிரன் நீண்ட தவம் செய்யச் சென்ற சமயத்தில் பிரஹஸ்பதி தம்மைச் சுக்கிரன் போன்று உரு மாற்றிக்கொண்டு அசுரர்களிடம் வந்து, மிகத் தவறான வேத சாஸ்திர சம்பிரதாய, நீதிகளுக்கு விரோதமானவற்றை உபதேசித்தார். அசுரர்கள் கடவுளையும் மற்ற தெய்வங்களையும் மறந்து சடங்குகள் யாகங்கள் முதலியவற்றைச் செய்யாமல் மறைநெறிகளுக்குப் புறம்பாக நடந்து தங்களின் சக்திகளையெல்லாம்
இழந்தனர். பிரஹஸ்பதி பரப்பிவிட்ட நாத்திக வாதத்தால் அசுரர்களின் தவ வலிமையும் ஆன்மீக ஆற்றலும் மிகவும் குன்றியது. போலி சுக்கிரனாக பிரஹஸ்பதி வந்து உபதேசித்ததால் இந்த சித்தாந்ததுக்கு பார்ஹஸ்பத்யம் என்று பெயர். இதுவும் நாத்திக வாதம்தான்.
உபநிஷதங்கள் மிகச் சிறந்த தத்துவங்களை உள்ளடக்கியவை.இவற்றில் சில தத்துவங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றை விவரித்து வியாக்கியானம் செய்த உட்சமயங்களும் உண்டு. அவற்றில் ஒன்று சாங்க்யம். இதை நிறுவியவர் கபிலர் என்னு ரிஷி. வேதங்களை சாங்க்யம் ஏற்றுக்கொண்டது. ஆனால் கடவுள் கொள்கையை இது ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே இதை 'நிரீசுவர சாங்க்யம்' என்று குறிப்பிட்டார்கள்.
பிற்காலத்தில் வந்த சாங்க்யர்கள் கடவுள் தத்துவத்தை ஏற்றுக்கொண்டனர். இவர்களை 'சேஸ்வர சாங்க்யர்' என்று குறிப்பிட்டார்கள்.
கோயில்களையும் சடங்குகளையும் சாஸ்திரங்களையும் அறவே வெறுத்து மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கின்றனர் சிவவாக்கியர் போன்ற சித்தர்கள்.
இந்து சமயத்தில் மட்டுமே நாத்திகம் உண்டு எண்ணிவிடாதீர்கள்.
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய கிரேக்க
நாட்டில் எப்பிக்கியூரஸ், ஸீனோ, டெமாக்ரிட்டஸ் போன்றவர்கள் அவரவர் பாணியில் நாத்திக வாதத்தை ஏற்படுத்தினர். ஸ்கெப்டிஸ்ட் என்னும் ஒருவகை நாத்திகமும் பரவியிருந்தது.
கிருஸ்தவ மத்தைச் சேர்ந்தவர்கள் ஏக்நாஸ்ட்டிக் எனப்படும் நாத்திகத்தை ஏற்படுத்தினர். தலை சிறந்த அரசியல் வல்லுனராகிய மாக்கியவல்லி, ரேனே டேய்கார்ட் போன்றவர்களின் கொள்கையில் இந்த சாயல் மிக அதிகமாக இருக்கும்.
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர் இங்கர்ஸால். ஒரு மாலை நேரச் சொற்பொழிவுக்கு மூவாயிரத்து ஐந்நூறு டாலர்களை அந்தக் காலத்திலேயே வாங்கியவர் இங்கர்ஸால். 'நான் ஏன் ஒரு ஏக்நாஸ்ட்டிக்' - 'நான் ஏன் நாத்திகன்' என்னும் நூல் பகுத்தறிவுபூர்வமாகச் சிந்திக்கும் ஆத்திகர்களால் கட்டாயமாகப் படிக்கப்பட வேண்டிய நூல். அறிஞர் அண்ணாவின் சிந்தனையில் மிகப் பெரிய தாக்கத்தைத் தோற்றுவித்தவர் இங்கர்ஸால்தான்.
ஐரோப்பிய சிந்தனை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் வால்ட்டேய்ரும் ரூஸோவும்தாம். வால்ட்டேய்ர் ஒரு சிறந்த நாத்திகவாதி.
இவர்கள் அனைவரின் சிந்தனையையும் தூண்டிவிட்டவர் பெனடிக் தே ஸ்பிநோஸா. இவர் ஒரு யூதர். இவருடைய கொள்கைகள்தாம் இன்றளவும் ஐரோப்பிய பகுத்தறிவு வாதச் சிந்தனைகளை மிகவும் பாதித்து வருகின்றன.
நாத்திக வாதம் இந்து சமயத்தில் எப்போதுமே நிலவி வந்திருக்கிறது..
கடவுள் இல்லை என்று கூறுபவர்களை 'நிரீசுவர வாதி'கள் என்று
குறிப்பிடுவார்கள்.
எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய தந்தையார் சின்னமுத்துப்பிள்ளையை அப்படித்தான் அந்தக் காலத்தில் வாழ்ந்த தென்கிழக்காசிய இந்துப் பிரமுகர்கள் அழைத்தனர்.
அதன் நிமித்தம் 'கடவுளின் உண்மைத் தோற்றம்' என்ற தலைப்பில்
1936-ஆம் ஆண்டில் என் தந்தையார் ஒரு சிறிய விளக்க நூலை எழுத
நேரிட்டது. அந்தச் சிறுநூலைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல்
அக்காலத்துத் தமிழ் நேசன் பத்திரிக்கை அச்சிறு நூலைத் தாக்கி ஒரு தலையங்கமே எழுதிவிட்டது.
பெரியாரைப் பற்றி யார் யாரோ ஏதேதோ கூறுவார்கள். ஆனால்
உண்மையிலேயே பெரியாரின் நாத்திக வாதத்தால் இந்து சமயம் நன்மையே பெற்றது என்பதுதான் ஆணித்தரமான அசைக்கமுடியாத யதார்த்தமாகும்.
நாத்திக வாதம் எந்தக் காலத்திலும் இந்து சமயத்துக்கு மிரட்டலாக
விளங்கியதேயில்லை. உண்மையிலேயே அதனால் அவ்வப்போது இந்து சமயம் புத்துணர்வு பெற்றே வந்திருக்கிறது. இதுதான் உண்மை.
நம் சமுதாயத்தில் பல நாத்திகர்கள் மற்றவர்களைவிடச் சிறந்த
நேர்மையாளர்களாகவும் பெரும் சிந்தனையாளர்களாகவும் மேதைகளாகவும் விளங்கியிருக்கின்றனர். சமுதாயத்தில் மலிந்துவிட்ட பிற்போக்குவாதத்தைத் தைரியமாக எப்போதுமே எதிர்த்து வந்துள்ள வீரமிகு சிறுபான்மையாளர்கள் அவர்கள்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$