AGAINST ODDS-#1
பெரும் சாதனை-#1
முஹம்மது அலி X ஸான்னி லிஸ்ட்டன் உலக ஹெவி வெய்ட் சாம்ப்பியன்ஷிப் போட்டி
சில நாட்களுக்கு முன், யூட்டியூபில் Norman Cousins என்பவர் சம்பந்தமாக ஏதும் இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தேன்.
அவருடன் எடுக்கப்பட்ட ஒரு பேட்டி இருந்தது. அந்தப் பேட்டி ஒரு
ஸீரிஸில் இருக்கின்றது. ஸீரிஸ் பெயர்?
DAY AT NIGHT.
பேட்டிகளை எடுத்தவர் பெயர் JAMES DAY. டீவீயில் இரவுகளில் எடுக்கப்பட்ட பேட்டி. ஆகையால்தான் அந்தத் தலைப்பு.
இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த சாதனையாளர்கள், அறிஞர்கள், புலவர்கள், நடிகர்கள், இலக்கியவாதிகள் என்று பலரைப் பேட்டி எடுத்துள்ளார். அவர் எடுத்தவை நூற்றுமுப்பது. அவற்றில் சிலவற்றை யூட்டியூபில் காணலாம்.
நார்மன் கஸின்ஸையும் பேட்டி கண்டுள்ளார்.
வேறு என்னென்ன பேட்டிகள் உள்ளன என்பதைப் பார்க்கும்போது குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலியும் கிடைத்தார்.
அதன் தொடர்பாக இன்னொரு ஸீரிஸ் கிடைத்தது. முஹம்மது அலி
சண்டையிட்ட போட்டிகளில் ஜெயித்த சண்டைகளைத் தொகுத்துப்
போட்டிருக்கிறார்கள்.
அந்த ஸீரிஸில் நான் பார்த்த முதல் சண்டை முஹம்மது அலியின் உலக
ஹெவிவெய்ட் சாம்ப்பியன் போட்டிகளில் முதலாவதாக நடந்த Sonny Liston vs Muhammed Ali.
அலியை இரண்டே ரவுண்டில் வீழ்த்திவிடுவதாக ஸான்னி சொல்வார்.
ஸான்னியை எட்டு ரவுண்டில் வீழ்த்தப்போவதாக அலி சொல்வார்.
ஸான்னி லிஸ்ட்டன் குத்துச்சண்டைப் போட்டிகளில் ஆட்களைக்
கொன்றிருக்கிறார். தோற்றதே கிடையாது. அவர் சிறையில் இருந்த ஆசாமி. அவருக்கும் மா·பியா போன்ற பயங்கர நிறுவனங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருந்ததாகக் கருதினார்கள்.
அவருக்கு நீளமான கைகள்.மிகவும் பலமான குத்துக்களை விடுவார்.
Big Bear - பெருங்கரடி என்னும் பெயர் அவருக்கு உண்டு. அதை
வைத்தவரே அலிதான்.
லிஸ்ட்டன் எங்கெங்கு பயிற்சி செய்கிறாரோ, அங்கெல்லாம் ஆட்களைக் கூட்டிச்சென்று கேலிக் கூக்குரல்களைப் போட்டு அவருக்குக் கடுப்பேற்றி
வந்தார். வெறியையும் ஏற்றிவந்தார்.
இதெல்லாம் ஸைக்காலஜிக்கல் வார்·பேர் Psychological Warfare
என்னும் வகையில் அடங்கும். சுருக்கமாக PSY-WAR என்பார்கள்.
இது அலியின் பல உத்திகளில் ஒன்று.
கண்மூடித்தனமாக தன்னைப் பற்றி பீற்றிக்கொண்டு திரும்பத் திரும்பச்
சொன்னதையே சொல்லி சொல்லி ஜம்பம் அடித்துக்கொள்வார். அதே சமயம்
எதிராளியை எந்த அளவுக்கு மட்டம் தட்டிப் பேசமுடியுமோ அதையெல்லாம்
செய்வார். என்னத்தையாவது கர்வமாக ஆர்ப்பாட்டமாக திமிராக வீராப்பாகச்
சொல்லிக் கொண்டேயிருப்பார். ஆகையாலேயே அவருக்கு 'லூயீவில் லிப்'
என்று பட்டப்பெயர். பாக்ஸிங் ரிங்கில் சண்டைக்கு முன்னால் விடாமல் கத்திப்
பேசிக்கொண்டே இருப்பார்.
இது இன்னொரு உத்தி.
இதனால் அலியை அமெரிக்காவில் பெரும்பாலோருக்குப் பிடிக்காது.
இவையெல்லாம் அவருடைய வெற்றிக்குப் பெரிதும் உதவின.
இந்த உத்திகளைப் பற்றி வேறொரு கட்டுரையில் இன்னும் விரிவாகப்
பார்ப்போம்.
இதனாலெல்லாம் மக்கள் அசரவில்லை.
லிஸ்ட்டன் ஒரு கில்லர்.
ஆகவே அலி தோற்றுவிடுவார் என்றே எல்லோரும் நினைத்தனர்.
ஸான்னி லிஸ்ட்டன் சண்டையைப் பற்றி நிறையக் கேள்விப்
பட்டிருக்கிறேனேயன்றி அந்தச் சண்டையை படங்களில் பார்த்தது கிடையாது.
இப்போதுதான் அந்த வாய்ப்புக் கிடைத்தது.
உலக ஹெவி வெய்ட் சாம்ப்பியன் போட்டியின் ஆரம்பத்தில் அலியை இரண்டே ரவுண்டுகளில் வீழ்த்து விடப்போவதாக லிஸ்ட்டன் கூறினார். அதுவும் வாயால் சொல்லவில்லை. இரண்டு விரல்களைக் காட்டினார்.
ஒவ்வொரு ரவுண்டிலும் லிஸ்ட்டன் விட்ட குத்துக்கள் அலியின்மீது
படவேயில்லை. அலி தம்முடைய விசேஷ டெக்னிக்கான பட்டாம்பூச்சி போல நாட்டியம் ஆடிக் கொண்டே தேனீயைப் போலக் கொட்டிக் கொண்டேயிருந்தார்.
"I DANCE LIKE BUTTERFLY AND STING LIKE A BEE"
இரண்டாவது ரவுண்டிலிருந்து லிஸ்ட்டனின்மீது குத்துக்களை விட்டார்.
ஆறாவது ரவுண்டு முடிந்தது. லிஸ்ட்டனின் கண்ணுக்குக் கீழே சதை
கிழிந்திருந்தது.
அவருடைய மூலையில் உட்கார்ந்திருந்தார். அவருடைய ட்ரேய்னர்
முதலியோர் அவரை ஊக்கப்படுத்திக்கொண்டிருந்தனர்.
ஏழாவது ரவுண்டுக்கான மணி அடித்தது.......
லிஸ்ட்டன் எழுந்து வரவில்லை.
முடியவில்லை.
அவருடைய தோள்பட்டையில் ஒரு தசை நாண் அறுந்துவிட்டதாகப் பின்னால் கண்டுபிடித்தார்கள். ஆகவே கையைத் தூக்க முடியவில்லை.
அவ்வளவுதான்.
அலி கைகளை உயரத் தூக்கி, கத்திக்கொண்டு குதித்துக்கொண்டிருந்தார்.
ரெ·பரி சண்டையை நிறுத்தினார். நடுவர்கள் லிஸ்ட்டன் ஏழாவது ரவுண்டில் நாக் அவுட் என்று பிரகடனப் படுத்தினர்.
அலி உலக ஹெவி வெய்ட் சாம்பியன் ஆனார்.....
கதை அத்துடன் முடியவில்லை.....
ஸான்னி லிஸ்ட்டன் தோற்றதை ரொம்பப்பேர் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆகவே ஒரு ரீமேட்ச்சுக்கு ஏற்பாடு செய்தனர்.
சண்டை ஆரம்பிக்கும்போதே அலி ரிங்கைச் சுற்றிச் சுற்றி குதித்துக்
கொண்டே வந்தார். அவ்வப்போது லிஸ்ட்டனைக் குத்துவார். லிஸ்டன் பல குத்துக்களை விட்டார். ஆனால் அலி அவற்றிலிருந்து தப்பித்துக் கொண்டார்.
திடீரென்று வெகு வேகமாக லிஸ்ட்டனுடைய தலையில் தம்முடைய வலது கையால் அலி ஒரு குத்து விட்டார்.
அவர் கையை ஓங்கியதும் தெரியாது. குத்து விட்டதும் தெரியாது. அதே சமயம் லிஸ்ட்டன் ஒரு குத்தை விட்டார். ஆனால் அது படவேயில்லை. ஆனால் ஸான்னி அப்படியே முன்னால் போய்த் தடுமாறி விழுந்தார். தரையிலேயே புரண்டார். எழுந்திருக்க முடிய வில்லை. மீண்டும் விழுந்தார். இதன் நடுவில்
அலி தம்முடைய கால்களை முன்னும் பின்னுமாக வேகமாக எடுத்துவைத்து
குதிக்க ஆரம்பித்தார். இது ALI SHUFFLE என்று பெயர் பெற்றது.
ஒரு வழியாக லிஸ்ட்டன் எழுந்து விட்டார். நடுவாராகிய ஜோ
வால்க்காட்டுக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதுவும் புரியவில்லை.
சண்டையைத் தொடருமாறு உத்தரவிட்டார்.
அடுத்தடுத்து லிஸ்ட்டனுக்குக் குத்துக்கள் விழுந்தவண்ணமிருந்தன.
லிஸ்ட்டனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. உடனேயே ஜோ வால்க்காட் சண்டையை நிறுத்தினார்.
ஒன்றாம் ரவுண்டிலேயே ஸான்னி நாக் அவுட்டாகி விட்டதாக அறிவிப்புச் செய்தார்.
அவரை நாக் அவுட் செய்த குத்தை யாரும் பார்க்கவில்லை. அலிக்கே
அது சந்தேகமாயிருந்தது. அதன் பின் ஸ்லோ மோஷன் படத்தில் வெகு
வேகமாக வலக்கையால் லிஸ்ட்டனின் தலையில் அலி குத்தி விடுவதைக் கண்ட பின்னரே நம்பினர்.
அதை இப்போதும் The Phantom Punch என்றே குறிப்பிடுகிறார்கள்.
கம்ப ராமாயணத்தில் ஜனக மஹாராஜாவின் அரசவையில் சிவ தனுசு
ஆகிய வில்லை எடுத்து வளைத்து நாணேற்றும் போட்டி.
மற்றவர்கள் யாராலும் முடியவில்லை.
ராமர் அதை எடுத்தார். ஒரு முனையைக் காலால் மிதித்து நிலைப்படுத்திக் கொண்டார். இடது கையால் வில்லை வளைத்தார். வலக்கையால் நாணைப் பூட்ட.......
ஆனால் பூட்டுமுன்னரே இடி முழக்கம் போல் சப்தம் கேட்டது.
அந்த வில் அப்படியே முறிந்து விழுந்தது.
ஆனால்.....
ராமர் வில்லை எடுத்தை மட்டுமே அவையினர் கண்டனர். தூக்கி
நிறுத்தியதையோ, வளைத்ததையோ நாணை இழுத்துப் பூட்டப் போனதையோ யாரும் பார்க்கவில்லை.
அந்த வில் முறிந்ததைக்கூட யாரும் பார்க்கவில்லை.
அந்த பயங்கர சப்தத்தைத்தான் கேட்டனர்.
அவ்வளவு வேகத்தில் நடந்துவிட்டது.
"எடுத்தது கண்டனர்.... இற்றது கேட்டனர்" என்கிறார் கம்பர்.
அது போலத்தான்.
அலி வலக்கையை எடுத்ததையோ ஓங்கியதையோ குத்து விட்டதையோ யாரும் பார்க்கவில்லை.
ஆனால் ஸான்னி லிஸ்ட்டன் தடுமாறியவாறு முன்னுக்குச் சென்று
விழுந்ததையும் புரண்டதையுமே எல்லாரும் பார்த்தனர்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$